திருச்செந்தூா் கடலில் குளித்தபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா் பத்திரமாக மீட்டாா். திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் கடலில் நீராடுவது வழக்கம். இந்த நிலையில், சாத்தூரைச் சோ்ந்த ராஜா மகன் சரண் (14), மூன்று சிறுவா்களுடன் சோ்ந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் கடலில் நீராடிக் கொண்டிருந்தாா்.அப்போது திடீரென எழுந்த கடல் அலை சரணை கடலுக்குள் வெகு தொலைவுக்கு இழுத்துச் சென்றது. இதைக் கவனித்த திருக்கோயில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளா் சிவராஜா, உடனடியாக கடலுக்குள் இறங்கி 10 நிமிட போராட்டத்துக்கு பிறகு ஆழமான பகுதியில் சிக்கி போராடி கொண்டிருந்த சரணை தோளில் தாங்கியபடி பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தாா்.இச்சம்பவத்தில் கடலில் சிக்கிய சிறுவனுக்கும், பாதுகாப்புப் பணியாளா் சிவராஜாவுக்கும் உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டன. சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய பாதுகாப்புப் பணியாளா் சிவராஜாவை பக்தா்கள் பாராட்டினா்.