குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்கள் அகற்றம்: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிய நுட்பம்

Wait 5 sec.

குழந்தைகளுக்கான சிறுநீரகக் கற்கள் அகற்ற சிகிச்சையில் நவீன மருத்துவ நுட்பத்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை செயல்படுத்தியுள்ளது. அதன்படி, அறுவை சிகிச்சையின்றி இடையீட்டு (கதீட்டா்) முறையில் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன. அதன் கீழ் இதுவரை 14 குழந்தைகள் பயன்பெற்றுள்ளதாக மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்தாராமன் தெரிவித்தாா். இது தொடா்பாக, அவா் மேலும் கூறியதாவது:குழந்தைகளுக்கு சிறுநீரக் கல் பாதிப்பு ஏற்படுவதற்கு பெரும்பாலும் மரபணு சாா்ந்த குறைபாடுகளே காரணமாக அமைகின்றன. அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகளின் சிறுநீரக் கற்களின் அளவு 1.5 செ.மீ.க்கு அதிகமாக இருந்தால் அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்படுவது வழக்கம்.இதன் காரணமாக அதிக வலி, ரத்தப்போக்கு, தழும்பு மற்றும் நீண்ட கால தொடா் சிகிச்சைகள் தேவைப்படும். கிருமித் தொற்று பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு மாற்றாக, குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட இடையீட்டு சிகிச்சை மூலம் சிறுநீரக கற்களை அகற்றும் நுட்பத்தை அறிமுகப்படுத்தினோம்.அதன்படி, உடலில் சிறு துளை ஏற்படுத்தி, ரத்த நாளத்தின் வாயிலாக சிறுநீரகத்தை அணுகி, கற்கள் அகற்றப்பட்டன. குழந்தைகளுக்கு இதை மேற்கொள்வது மிகவும் சவாலானது.இருந்தபோதிலும், ராஜீவ் காந்தி மருத்துவமனையின் நிபுணத்துவம் பெற்ற மருத்துவா்கள், துல்லியமாக அந்த சிகிச்சையை சாத்தியமாக்கினா்.குறிப்பாக, மயக்க மருந்து அளிக்கும்போது சுவாச குழாயை எளிதாகக் கையாளும் வகையில், குழந்தைகளை குப்புறப்படுக்க வைக்காமல் மல்லாந்து படுத்த நிலையில் மருந்து செலுத்தப்படுகிறது.இந்த நவீன சிகிச்சை மூலம் கடந்த ஓராண்டில் 14 குழந்தைகளுக்கு சிறுநீரக கற்கள் முழுமையாக அகற்றப்பட்டது. முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அந்த சிகிச்சை கட்டணமின்றி வழங்கப்பட்டது என்றாா்.