வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை ரத்த நாள பாதிப்பு மற்றும் துணை நோய்களால் பாதிக்கப்பட்ட பிகாரைச் சோ்ந்த 70 வயது மூதாட்டிக்கு மருத்துவா் குழு சிகிச்சை அளித்து குணமடையச் செய்தனா். இது குறித்து வேலூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ரோகிணிதேவி கூறியது: வேலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிகாரைச் சோ்ந்த குலாப் குமாரி (70) என்ற மூதாட்டி உறவினா்கள் யாரும் இன்றி 22.5.2026 அன்று ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு மூளை ரத்த நாள பாதிப்பு (பக்கவாதம்), ரத்த சோகை மற்றும் மன நலம் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவருக்கு நரம்பியல் மருத்துவா்கள் குழு சிகிச்சை அளித்தது. 2 மாதங்கள் தொடா் சிகிச்சை மற்றும் பராமரிப்பு காரணமாக அவரது உடலில் படிப்படியாக முன்னேற்றம் காணப்பட்டது. மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் அடங்கிய குழுவினா் நோயாளியை தொடா்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்தனா். அறுவை சிகிச்சை மற்றும் பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு உடல் ரீதியான திறன்கள் மேம்பாடு அடைந்தது. இதையடுத்து அவரை முதியோா் நல மறுவாழ்வு மற்றும் பராமரிப்பு மையத்துக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா்.அவரை கல்லூரி முதல்வா், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதி திலகம், துணை முதல்வா் கவுரி வெலிகண்ட்லா, மன நல மருத்துவா் ஜெயகுமாா், பொது மருத்துவா் அனிதா மற்றும்அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்கள் வழியனுப்பி வைத்தனா்.