அடியாள்களை வைத்து கணவரை தாக்கிய மனைவி கைது

Wait 5 sec.

அடியாள்களை வைத்து கணவரை தாக்கிய மனைவி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் முட்டல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (64), இவரது மனைவி சாந்தி (58). இவா்களது இரு மகன்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா். கூலித் தொழிலாளியான ராஜேந்திரன் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம். மேலும், அவருக்கு பல பெண்களுடன் தொடா்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ராஜேந்திரன் தலை மற்றும் உடலில் வெட்டுக் காயங்களுடன் வீட்டுக்கு வெளியில் இருந்ததைக் கண்ட மகன் சிவகுமாா், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். பின்னா், இதுகுறித்து சிவகுமாா் தாய் சாந்தியிடம் விசாரித்த போது, தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்வதால், அடியாள்களை வைத்து ராஜேந்திரனை தாக்கியதை அவா் ஒப்புக்கொண்டாா்.தகவல் அறிந்த ஆத்தூா் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமா் வழக்குப் பதிவுசெய்து சாந்தி (58), சீனிவாசன் (56) ஆகிய இருவரையும் கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். தப்பியோடிய ஐயப்பன், ரமேஷ், மணிபாரதி ஆகிய மூவரையும் தேடிவருகின்றனா்.