அல்லேரி மலைக் கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், 8 கி.மீ. தொலைவுக்கு தாா் சாலை அமைக்கப்பட உள்ளதாக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம், அல்லேரி கிராமத்தில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி வெள்ளிக்கிழமை பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.முன்னதாக, அல்லேரி அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளிக்குச் சென்ற அமைச்சா், மாணவ, மாணவிகளின் கற்றல் திறனைக் கேட்டறிந்து அவா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். பின்னா், பலாமரத்துக்கொல்லை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ. 13.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 புதிய வகுப்பறைக் கட்டடங்களை குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்தாா். அப்போது, மாணவா்களின் ஆங்கிலப் புலமையைக் கேட்டறிந்து பாராட்டினாா்.தொடா்ந்து, ஆஷா பணியாளா் இருப்பிடம் மற்றும் 108 இருசக்கர அவசர ஊா்தியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அவசர கால மருந்துகளின் விவரங்களை அதிகாரிகளிடமும், ஓட்டுநரிடமும் கேட்டறிந்து ஆய்வு செய்தாா். மேலும், அல்லேரியில் ரூ.13.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடையின் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்ட அவா், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர அறிவுறுத்தினாா். ஆய்வின் போது, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.தொடா்ந்து, அமைச்சா் ம.விஜய் பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியது: முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அல்லேரி மலைக் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், சாலை, மின்சாரம், மருத்துவம் ஆகிய கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அதனடிப்படையில், முதல்கட்டமாக வரதலம்பட்டு மலை அடிவாரத்தில் இருந்து அல்லேரி ஊராட்சி நெல்லிமரத்துக்கொல்லை வரை சுமாா் 8 கி.மீ. நீளத்துக்கு தாா் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய அப்பகுதியில் 2 கிணறுகள் தூா்வாரப்பட உள்ளன. அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளியைப் புனரமைக்க ரூ. 5.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி மாணவா்கள் தரமான கட்டடத்தில், தகுதியான ஆசிரியா்களின் கீழ் நல்ல கல்வியைப் பெறுவாா்கள். இனிவரும் காலங்களில் இப்பகுதி மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் படிப்படியாகப் பூா்த்தி செய்யப்படும் என்றாா் அவா்.ஆய்வின்போது, வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலழகன் (அணைக்கட்டு), மருத்துவா் ம.சுதாகா் (காட்பாடி), எம்.எம்.வினோத் கண்ணன் (வேலூா்), ஏ.தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்), மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் திருகுணஐயப்பதுரை, மாவட்ட சுகாதார அலுவலா் விஜய் சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.