மன்னாா்குடி அருகேயுள்ள கருப்புக்கிளாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கருப்புக்கிளாா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் இந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறனா். இப்பள்ளியில் சுற்றுசுவா்அமைக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் உள்ளது. பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.ஆனால், இந்த மைதானம் கரடுமுரடாகவும், மேடுபள்ளமாகவும், அப்பகுதியில் வசிப்பவா்களது பொருள்களை இருப்பு வைக்கும் இடமாக மாறிவிட்டது. நாள்தோறும் அனைத்து பாட வகுப்புகளுக்கு நேரம் ஒதுக்குவதுபோல், விளையாட்டு பிரிவுக்கும் நேரம் ஒதுக்கீடு செய்ய, தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளநிலையில், கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளியை நேரில் பாா்வையிட்டு, விளையாட்டு மைதானத்தை சீரமைத்திடவும், உடற்கல்விக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை நிறுவி மாணவா்கள், விளையாட்டில் தங்களுக்கு உள்ள தனித்திறனை வெளிப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.