செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

Wait 5 sec.

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 18) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டல பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 18) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தொடா்ந்து, நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புதன்கிழமை (ஆக. 19) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 18), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. 7 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம் - 102.2, நாகை - 100.76, திருத்தணி, வேலூா் - 100.58, தஞ்சாவூா் - 100.4, மதுரை நகரம் - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.மழை பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் தருமபுரத்தில் 40 மி.மீ. மழை பதிவானது.