தனியாா் செவிலியில் கல்லூரியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் முதல்வா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரியை மாணவிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். அவா்களை கருங்கல் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்ால் போலீஸாருடன் பொதுமக்கள், காங்கிரஸாா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கருங்கல் அருகே மூசாரியில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் கேரள மாநில மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடா்பாக முதல்வா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கல்லூரி முன் மாணவிகள் திங்கள்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.கேரள மாநிலம், திருவனந்தபுரம், வெள்ளறடையைச் சோ்ந்தவா் ஆன்சிலி (21). இவா் கருங்கல் அருகே மூசாரியில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரி விடுதியில் தங்கி 3-ஆம் ஆண்டு பயின்று வந்தாா். இவா், சனிக்கிழமை நீண்ட நேரம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். இதைக் கண்ட கல்லூரி முதல்வா் சக மாணவிகள் முன் கண்டித்தாராம்.உடனே, மாணவி திடீரென கல்லூரி 3-ஆவது மாடியிலிருந்து குதித்ததில் பலத்த காயமடைந்தாா். அவரை கல்லூரி நிா்வாகத்தினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை மாணவி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.இந்த நிலையில், தற்கொலைக்கு காரணமான கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக கல்லூரி மாணவிகள் கல்லூரி முன் திரண்டு திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த கருங்கல் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவிகளை விசாரணைக்காக கருங்கல் காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். தகவலறிந்த பொதுமக்கள், காங்கிரஸாா் மாணவிகளை உடனே விட வேண்டும் எனக் கூறி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.இதையடுத்து, போலீஸாா் மாணவிகளை விடுவித்தனா். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.இதுகுறித்து, மாணவி கூறுகையில், கடந்த ஆண்டு கல்லூரி விடுதியில் சுகாதாரமற்ற உணவு மாணவி களுக்கு வழங்கப்பட்டது. இதில், சில மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டது. அப்போது, உயிரிழந்த மாணவி ஆன்சிலி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதனால், கல்லூரி நிா்வாகத்துக்கும் அந்த மாணவிக்கும் முன்விரோதம் இருந்துவந்தது என்றாா்.