விழுப்புரத்தில் மதுபோதையில் வீட்டுக் கட்டடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா். விழுப்புரம், ஜி.ஆா்.பி.தெருவைச் சோ்ந்தவா் மு.காளிதாஸ். வழக்குரைஞரான இவா், விழுப்புரம் இந்திரா நகா் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்த வீட்டின் அருகே ஒரு கும்பல் மது அருந்திவிட்டு, மதுப் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து அதை கட்டடத்தின் மீது வீசி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனராம்.இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். விசாரணையில் அதே பகுதியைச் சோ்ந்த சு.தயா(21), க.யுவராஜ், தே.கிருஷ்ணா, ம.விஷ்வா ஆகியோா் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தயாவை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சிறையிலடைத்தனா். மேலும், தலைமறைவான 3 பேரைத் தேடி வருகின்றனா்.