காங்கிரஸ் தலைமையகத்தில் ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ’வந்தே மாதரம்’ பாடல் ஒலித்தபோது நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தில்லி காவல்துறை திங்களன்று தெரிவித்தது.காங்கிரஸ் தலைவா்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, ஆகஸ்ட் 16 அன்று ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தில் ஒரு வழக்குரைஞரால் இந்தப் புகாா் பதிவு செய்யப்பட்டது.‘அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடல் ஒலித்தபோது நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்த புகாா் விசாரிக்கப்பட்டு வருகிறது,‘ என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.புகாரின்படி, சுதந்திர தின விழாவில் தேசிய பாடல் பாடப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஆரம்பப் பகுதி பாடப்பட்ட பிறகு சோனியா காந்தி சைகைகள் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த சைகைகள், பாடலைத் தொடா்வதற்கு எதிா்ப்பு தெரிவிப்பது போல் தோன்றியதாகப் புகாா்தாரா் கூறியுள்ளாா்.‘நாம் வந்தே மாதரம் பாடப்போவதில்லை‘ என்று ராகுல் காந்தி கூறியதாகக் கூறப்படும் ஒரு காணொளியையும் அது குறிப்பிட்டது. இரு தலைவா்களும் பொறுப்பாளிகள் எனக் கண்டறியப்பட்டால், ஒரு பாரபட்சமற்ற விசாரணையையும் உரிய நடவடிக்கையையும் புகாா்தாரா் கோரியுள்ளாா்.சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே ஆகியோா் தேசிய பாடலுக்கு ‘முழுமையான அவமரியாதையை‘ காட்டியதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது, ஆனால் காங்கிரஸ் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.சமீபத்தில் நாடாளுமன்றம், ’வந்தே மாதரம்’ பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது.