கர்ரேகுட்டா மலையில்பெருமையுடன் பறக்கிறது மூவர்ணக் கொடி: அமித் ஷா

Wait 5 sec.

நக்சல் தீவிரவாதத்தின் கோட்டையாகத் திகழ்ந்த கர்ரேகுட்டா மலையில் இப்போது மூவர்ணக் கொடி பெருமையுடன் பறப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.இதுதொடர்பாக அவரின் எக்ஸ் தளப் பதிவில், கர்ரேகுட்டா மலையில் சுதந்திரத் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஒரு காலத்தில் துப்பாக்கிகள் முழங்கிய இடத்தில், இப்போது தேசபக்தி எதிரொலிக்கிறது. சிவப்பு மண்ணின் மீது மூவர்ணக் கொடி பறப்பது, நக்சல் அச்சுறுத்தல் இல்லாத புதிய பஸ்தார் பகுதியின் வலிமை, முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாகும். சத்தீஸ்கரின் மாவோயிஸ்ட் கோட்டைகளாகக் கருதப்பட்ட பகுதிகள் வழியாக சுமார் 600 கி.மீ. தூரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் 'பஸ்தார் திரங்கா யாத்திரை', பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ரேகுட்டா மலைப்பகுதியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதோடு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இது அப்பகுதியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது.இந்த யாத்திரை முழுவதும் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணியை சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா, வனத்துறை அமைச்சர் கேதார் காஷ்யப் ஆகியோர் வழிநடத்தினர். இவர்களுடன் மக்கள் பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் நீண்ட காலமாக மாவோயிஸ்டுகளின் வலிமையான மறைவிடமாகக் கருதப்பட்டதும், பாதுகாப்புப் படையினரின் தீவிர மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குக் களமாக அமைந்ததுமான கர்ரேகுட்டா மலைப்பகுதியே இந்த யாத்திரையின் இறுதி இலக்காக இருந்தது.