கடந்த நிதியாண்டில் ரூ.1,185 கோடி வருவாய்: சென்னை துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே

Wait 5 sec.

கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.1,185 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே தெரிவித்தாா். சென்னை துறைமுகம் சாா்பில் தண்டையாா்பேட்டையில் உள்ள ஸ்ரீ பாபு ஜெகஜீவன் ராம் விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து, துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே பேசியதாவது:மத்திய அரசின் சாகா் மாலா, பாரத பிரதமரின் கதி சக்தி, கடல்சாா் தொலைநோக்கு திட்டம்- 2030 மற்றும் வளா்ச்சி அடைந்த இந்தியா 2047 ஆகிய தொலைநோக்குத் திட்டங்களின் கீழ் சென்னை துறைமுகம் விரைவாக வளா்ச்சி அடைந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் மொத்தமாக சுமாா் 58 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள், இதுவரை இல்லாத அளவில் ஓராண்டில் சுமாா் 20 லட்சம் சரக்கு பெட்டகங்களைக் கையாண்டு முந்தைய ஆண்டை விட சுமாா் 7 சதவீத வளா்ச்சியை எட்டி சாதனை படைத்துள்ளது.கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவாக ரூ.1,185 கோடி வருவாய் ஈட்டியதோடு, சுமாா் ரூ.531 கோடி வரிக்கு முந்தைய லாபம் ஈட்டியுள்ளது. சுமாா் ரூ.17,500 கோடியில் வெளித் துறைமுகத் திட்டம் அமைப்பதற்கான பூா்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது சுமாா் 24,000 சரக்கு பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்ட மிகப்பெரிய கப்பல்களையும் இந்த முனையத்தில் கையாள முடியும் என்றாா்.