தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குவதாகவும் அதற்கான ஆடியோ ஆதாரம் இருப்பதாகவும் இது நம்ம இயக்கத்தின் (வீ தி லீடர்ஸ்) தலைவர் அண்ணாமலை இன்று (ஆக. 16) தெரிவித்தார். முதல்வர் சி. ஜோசப் விஜய் லஞ்சத்துக்கு எதிராக இருப்பதை பாராட்டுவதாகவும், ஆனால் கமிஷன் வாங்கும் அமைச்சர்களுக்கு ஆரம்பத்திலேயே அவர் கடிவாளம் போட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். சென்னை எழும்பூரில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை தவெக அமைச்சர்கள் குறித்துப் பேசி சில கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்தார். இது தொடரபாக அண்ணாமலை பேசியதாவது:தவெக ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது என்கிறார்கள்; ஊழல் குறையவில்லை, தொடங்கியுள்ளது. முதல்வர் லஞ்சத்துக்கு எதிராக இருக்கிறார்; அதனை நாங்கள் பாராட்டுகிறோம். சில அமைச்சர்கள் டெண்டர்களுக்கு கமிஷன் வாங்கத் தொடங்கியுளனர். ஆரம்பத்திலேயே அத்தகைய அமைச்சர்களுக்கு கடிவாளம் போட வேண்டும். அமைச்சர்கள் 2%, 4% கமிஷன் கேட்கின்றனர். அந்த ஆடியோ என்னிடம் உள்ளது. பள்ளிகள், நீர்நிலைகள், கிராமப்புறங்களை சீரமைக்க முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், கிராமங்களின் வளர்ச்சிக்காகவும் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். நீர் மேலாண்மை, கல்வி, கிராமப்புற வளர்ச்சிக்கு 5 ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்.சென்னையில் சொகுசான வீட்டில் அமர்ந்துகொண்டு முக்கியமான முடிவுகளை முதல்வர் எடுக்கக் கூடாது. ஒவ்வொரு கிராமத்துக்குச் சென்று முடிவுகளை எடுக்க வேண்டும். தில்லியில் அமர்ந்துகொண்டோ, கோபாலபுரத்தில் அமர்ந்துகொண்டோ, பனையூரில் அமர்ந்துகொண்டோ முடிவு எடுத்தால் அது சரிவராது. பூமி வெப்பமாகிக்கொண்டே போகிறது. குடிக்க தண்ணீர் இல்லை. பூமிக்குள் இருக்கும் நீரை 73% உறிஞ்சி எடுக்கிறோம். எதிர்காலத்தில் மழை இல்லை என்றால் மக்களின் நிலை என்ன?சென்னையில் முன்பு 25% இடம் பசுமையாக இருந்தது. இப்போது வெறும் 10% ஆகக் குறைந்துள்ளது. சென்னையில் 90% கார்கிரீட்தான் உள்ளது. பின்னர் நகரத்தில் எப்படி மக்கள் வாழ முடியும். இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என அண்ணாமலை பேசினார்.