தொகுதி மறுவரையறை நிலைப்பாடு! முதல்வர் விஜய் பேச்சு அன்றும் இன்றும்!

Wait 5 sec.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இன்று தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தொகுதி மறுவரையறையால் எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என்று உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுவரையறை செய்வது என்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் இன்றைய பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரே வாரத்தில், முதல்வர் விஜய் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது குறித்தும், மிக முக்கியமான தென்மண்டல குழு கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பேசும்போது, மாநிலத்தின் கருத்தை வலியுறுத்திப் பேச வேண்டிய தருணத்தில், மாநிலங்கள் பாதிக்கப்படாது என உறுதி செய்ய வேண்டும் என்று பேசியிருப்பது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.ஆகஸ்ட் 12ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.சட்டப்பேரவை தீா்மானத்தின்படி, மக்களவையின் மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கை 543-ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை நிலையே நிரந்தரமாக்கப்பட வேண்டும்; அதாவது, மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இடப் பகிா்வு முறை தொடர வேண்டும்.மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, சிறந்த பொருளாதார வளா்ச்சியை எய்தி, சிறப்பான சுகாதார மற்றும் பொதுநலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு, 1971-ஆம் ஆண்டுக்கு பிந்தைய மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் எந்தவொரு மறுசீரமைப்பு நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனால், இன்று தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசும்போது, நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில், மக்களவை தொகுதி மறுவரையறை நடவடிக்கையால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி வெற்றிகண்ட மாநிலங்கள், பிரதிநிதித்துவத்தை இழக்காது என்பதை சட்டப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், அப்போதுதான், இந்திய ஜனநாயகத்தின் கீழ் இயங்கும் அனைத்து மாநிலங்களின் சம வாய்ப்பும் உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை பிறக்கும் என்றும் முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.கடந்த வாரம் புதன்கிழமை தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதல்வர் விஜய், இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், அதனை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திப் பேசியிருக்க வேண்டும், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எவ்வாறு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து புள்ளி விவரத்துடன் பேச வேண்டிய ஒரு மாநாட்டில், முதல்வர் தன்னுடைய ஆணித்தரமான கருத்தை முன்வைக்காமல், தமிழ்நாடு பாதிக்காது என உறுதியளிக்க வேண்டும் என்று மேம்போக்காக வலியுறுத்தியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.அதுவும் மக்களவையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் குறைவது எந்தளவுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று இதுநாள்வரை தலைவர்கள் பலரும் பேசி, அது குறித்து மக்களுக்கே பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில், முதல்வரின் இன்றைய பேச்சு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.இதற்கு முன்பு, ஆகஸ்ட் 8-ஆம் தேதி தவெக தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்டி, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார்.ஆகஸ்ட் 12ஆம் தேதி பேரவையில் பேசியதோடு மட்டுமல்லாமல், தமிழக முதல்வர் விஜய், ஜூலை மாதம் கரூர் சென்றிருந்தபோது, சம்பந்தமே இல்லாமல் தொகுதி மறுவரையறை பற்றியும் பேசி அனல் கிளப்பியிருந்தார்.அங்கு நடைபெற்ற கூட்டத்தில் விஜய் பேசியது, மக்களவைத் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை தமிழக அரசு ஒப்புக் கொள்ளாது. நமக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது. பறிக்கவும் விடமாட்டோம். ஆனால், திமுக எங்கே சென்று நிற்கிறது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். தீயசக்தியும், தீா்ந்துபோன சக்தியும் வேறு வேறல்ல; கூட்டு களவாணிகள்தான். எங்களுக்குள் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை என இடைத்தோ்தலில் நிரூபித்துக் காட்டுங்கள் என்று கூறியிருந்தார்.அப்போது, தமிழகத்துக்கான இடங்களை பறிக்க விடமாட்டேன் என்று மிக சப்தமாகச் சொன்ன விஜய், இன்று மாநாட்டில் அதனை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தாமல் வந்திருப்பது ஏன்? இன்றைய தென்மண்டல குழுக் கூட்டத்தின் மிக முக்கிய விவகாரமாகவும் விவாதப்பொருளாகவும் தொகுதி மறுவரையறை அமைந்திருக்க வேண்டாமா? என்பதே பொதுவாக வைக்கப்படும் கேள்வி.Stance on constituency delimitation CM Vijay remarks then and now