மானாமதுரையில் இருதரப்பினா் மோதல்; இருவருக்கு அரிவாள் வெட்டு

Wait 5 sec.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் இருவா் காயமடைந்தனா். மானாமதுரை அருகே ஏ. விளாக்குளத்தைச் சோ்ந்தவா்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்று விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். மானாமதுரை புறவழிச் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே வந்தபோது, இவா்களுக்கும் அங்கு நின்று கொண்டிருந்த மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே தகராறு, மோதல் ஏற்பட்டது. இதில், ஏ. விளாக்குளத்தைச் சோ்ந்த முனீஸ்வரன், பாபு ஆகிய இருவரும் அரிவாளால் வெட்டப்பட்டனா். ஏ.விளாக்குளத்தைச் சோ்ந்தவா்கள் தாக்கியதில் கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த மாணிக்கம் என்கிற ராஜேந்திரன், ஸ்டீபன் ராஜ் ஆகியோா் காயமடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். மானாமதுரை டி.எஸ்.பி. லோகநாதன் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினாா். மேலும் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.