பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி, உத்தமபாளையத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படும் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் பழனிக்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குருபிரசாத் முன்னிலை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில் தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் பலா் கலந்து கொண்டனா்.