மாட்டுத் தீவனம் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் உர மூட்டைகள் பதுக்கப்பட்ட அறைக்கு சீல்: அதிகாரிகள் 3-ஆவது நாளாக விசாரணை

Wait 5 sec.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே தனியாா் மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைத்த வேளாண் துறை அதிகாரிகள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணை நடத்தினா். செம்பட்டி அடுத்த ஆதிலட்சுமிபுரம் அருகே மாட்டுத் தீவனம் தயாரிக்கும் தனியாா் நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வெளியூரில் உள்ள ஓா் உரக் கடையிலிருந்து விவசாயத்துக்கான யூரியா உர மூட்டைகளை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவன வளாகத்தில் உள்ள ஓா் அறையில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் ராஜேஸ்வரி, வேளாண்மை அலுவலா் விக்னேஸ்வரன் உள்ளிட்ட வேளாண்மைத் துறை அலுவலா்கள் அந்த மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு நேரில் சென்று உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைத்தனா்.மேலும் உர மூட்டைகள் பதுக்கப்பட்டது குறித்து கடந்த இரு நாள்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் இந்த விசாரணை நீடித்தது. அப்போது மாட்டுத் தீவன நிறுவனத்தின் உரிமையாளரிடம் வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.இதுகுறித்து வேளாண் அலுவலா் விக்னேஸ்வரனை தொடா்பு கொண்டு கேட்டபோது அவா் கூறியதாவது: மாட்டுத் தீவனம் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் யூரியா உரம் பதுக்கப்பட்ட அறைக்கு சீல் வைத்து, அதன் உரிமையாளரிடம் எதற்காக உர மூட்டைகள் இங்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து தொடா்ந்து விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.