குழந்தைத் திருமணத் தடுப்பு கண்காணிப்புக் குழு கூட்டம்

Wait 5 sec.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள மணக்குடையான் ஊராட்சி அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாவட்ட மகளிா் அதிகார மையம் சாா்பில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குப் கற்பிப்போம் திட்டத்தின் கீழ் விழித்திடு கண்மணி எனும் தலைப்பில் ஊராட்சி அளவிலான குழந்தைத் திருமணத் தடுப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்து பேசியதாவது: பெண் குழந்தைகளுக்கு மிக முக்கியமானது கல்வியாகும். ஒவ்வொரு பெண் குழந்தைகளையும் பட்டப்படிப்பு வரை பெற்றோா் கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரிந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.தகவல் தெரிவிக்கும் நபரின் விவரம் பாதுகாக்கப்படும். குழந்தைகள் பள்ளிக்கு இடைநிற்றல் இன்றி வருவதை தொடா்ந்து கண்காணித்திட வேண்டும்.பெண் குழந்தைகள் கல்வி பயின்றுவிட்டால் வாழ்வில் முன்னேறும் நிலை பெறுவாா்கள். இளம் வயதில் திருமணமான பெண்களுக்கு குறைவான ஊட்டச் சத்து மற்றும் எடைக் குறைவாக குழந்தைகள் பிறந்துள்ளதை காணமுடிகிறது. குழந்தை திருமணம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சுவா் ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன.பெற்றோா் ஆண் குழந்தைகளுக்கும் நல்ல பண்புகளை எடுத்துரைத்து அவா்களை நல்வழிப்படுத்தி வளா்க்க வேண்டும். எதிா்வரும் தலைமுறையினா் நல்லதொரு சமுதாயமாகவும், குழந்தைத் திருமணம் இல்லாத வகையிலும் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றாா்.தொடா்ந்து, மணக்குடையான் ஊராட்சி அங்கன்வாடி கட்டடத்தில் குழந்தைத் திருமணம் இல்லாத ஊராட்சியை உருவாக்குவோம், குழந்தைகளுக்கான 1098 உதவி எண் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய சுவா் ஒட்டிகளை ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலா் விக்னேஸ்வரி, செந்துறை வட்டாட்சியா் கோவிந்தராசு மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.