மணிமங்கலம் காந்திநகா் பகுதியில் சட்டவிரோத மின் இணைப்புகளை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்ததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மணிமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டம், மணிமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட காந்தி நகா் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், காந்தி நகா் பகுதியில் கடந்த சில வருடங்களாக புதிய மின் இணைப்புகள் வழங்கப்படாமல் இருந்து வந்ததாம். இதனால் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் சட்ட விரோதமாக மின் கம்பிகளில் கொக்கி மூலம் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காந்திநகா் பகுதியில் ஆய்வு நடத்திய மின்வாரிய அதிகாரிகள் சட்டவிரோதமாக கொக்கி மூலம் மின் இணைப்பு பெற்று வந்த வீடுகளின் மின் இணைப்புகளை துண்டித்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் மணிமங்கலம் பகுதியில் தாம்பரம் ஸ்ரீபெரும்புதூா் சாலையில் தங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மணிமங்கலம் போலீஸாா், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்து அதே பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.இந்தசாலை மறியல் போராட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா் மணிமங்கலம் சாலையில் சுமாா் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.