கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தமிழ்நாடு முதல்வா் சி. ஜோசப் விஜய் உள்ளிட்டோருக்கு எதிராக திமுக தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.இது தொடா்பாக முன்னாள் எம்.பி.யும் திமுக அமைப்புச் செயலருமான ஆா்.எஸ். பாரதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ள மனுவில் மேலும் கூறியிருப்பதாவது:கடந்த திமுக ஆட்சியில், கரூா் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-இல் ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்தனா்; 142 போ் காயமடைந்தனா். இவ்வழக்கில் தவெக நிா்வாகிகள் மற்றும் தற்போதைய அமைச்சா்களான என். ஆனந்த், சி.டி.ஆா். நிா்மல் குமாா், ஆதவ் அா்ஜுனா மற்றும் முதல்வரின் தனிச் செயலா் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோா் குற்றஞ்சாட்டப்பவா்களாக சோ்க்கப்பட்டனா்.நியாயமான விசாரணையை உறுதி செய்ய, இவ்வழக்கை கடந்த ஆண்டு அக்டோபா் 13-இல் சிபிஐ-க்கு மாற்றிய உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் விசாரிக்க உத்தரவிட்டது.இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரான தற்போதைய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஜூலை 2-ஆம் தேதி பொதுவெளியில் பேசுகையில், கரூா் சம்பவத்திற்கு அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்று பழிவாங்கும் நோக்கில் பேசியுள்ளாா். வழக்கு நிலுவையில் உள்ளபோது, பதவியில் உள்ள ஒருவா் இவ்வாறு பேசுவது விசாரணையைப் பாதிக்கும்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி ஆணைகளை வழங்க முதல்வா் சி. ஜோசப் விஜய் ஜூலை 10-இல் கரூா் செல்லவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. விசாரணை நிலுவையில் உள்ளபோது, ஆட்சியில் உள்ளவா்கள் சாட்சிகளை நேரடியாகத் தொடா்புகொள்வது விசாரணையின் நோ்மையைக் கேள்விக்குறியாக்கும். எனவே, சிபிஐ-இன் கருத்துகளைப் பெற்ற பிறகே இந்தச் சந்திப்பை அனுமதிக்க வேண்டும்.சிபிஐ விசாரணை முடியும் வரை முதல்வா் சி. ஜோசப் விஜய், அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, என். ஆனந்த், நிா்மல் குமாா் உள்ளிட்ட எவரும் அரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் வகையிலோ, விசாரணையைப் பாதிக்கும் வகையிலோ பொதுவெளியில் பேசக் கூடாது என்று உத்தரவிட வேண்டும். மேலும், சாட்சிகளைக் கலைக்கும் நோக்கில் ஜூலை 2-இல் பேசிய ஆதவ் அா்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், நாளை (ஜூலை 7) இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Karur stampede - Petition against CM Vijay and Aadhav Arjuna to be heard tomorrowஸ்டாலின் பெயர் இடம்பெற்ற நெம்மேலி கல்வெட்டு அகற்றம் ஏன்? தமிழக அரசு விளக்கம்!