தங்க நகைகள் மீது யாருக்குத்தான் பிரியமிருக்காது, ஆனால், பார்த்ததும் பளீச்சென்று மின்னும் தங்க நகைகளை விரும்பிய டிசைன்களில் வாங்கி அணிந்துகொள்வது என்பது இப்போதைக்கு பலராலும் இயலாததாக உள்ளது. காரணம் அதன் விலை.தங்கம் விலை அதிகரித்து விட்டதே என பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் கலங்கிக் கொண்டிருக்கும்போதுதான், சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் சில கண்ணை கவர்கின்றன.கழுத்தை நிரப்பும் அளவுக்கு தங்க நகைகளை வரிசைப்படுத்தி, இது வெறும் நான்கு - ஐந்து சவரன், இதன் விலை வெறும் இத்தனை லட்சம்தான் என்று சொல்கிறார்கள். பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கின்றன அத்தனை டிசைன்களும். இதனைப் பார்க்கும்போது, குறைந்த பணத்திலும் தங்க நகைகள் வாங்க முடியும் என்று நிம்மதி பெருமூச்சு விடுவதா? அல்லது இதனை திருமணத்தின்போது ஏற்பார்களா? விற்க முடியுமா? அவசரத்துக்கு அடகு வைக்க முடியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.மிகவும் முக்கிய கேள்வி, நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கும் 9 காரட் தங்க நகைகளுக்கு மதிப்பு உள்ளதா? என்பதே.9 காரட் தங்கம் என்றால்?நகைக்கடைக்காரர்கள் பயன்படுத்தும் சிக்கலான கலைச்சொற்களை எல்லாம் மறந்துவிடலாம்.காரட் (karat) என்பது உண்மையில் தங்கத்தின் விகிதத்தைக் குறிக்கும் அளவீடு மட்டுமே. தூய தங்கம் என்பது 24 காரட் ஆகும்; அதாவது அது 100 சதவீதம் சுத்தமான தங்கத்தைக் கொண்டுள்ளது. அப்படியானால், 9 காரட் தங்கம் என்றால், தூய தங்கத்துடன், பிற உலோகங்கள் (பொதுவாக தாமிரம், வெள்ளி மற்றும் துத்தநாகம் கலந்த உறுதியான கலவை) சேர்க்கப்பட்டிருக்கும்.அதாவது சரியாக 37.5 சதவிகித தூய தங்கம் சேர்த்து தயாரிப்பதே 9 காரட் தங்க நகைகள். தூய தங்கம் குறைவாகக் கலக்கப்பட்டிருக்குமே தவிர போலியானது அல்ல. இதுவும் முற்றிலும் உண்மையான தங்க நகைதான்.9 காரட் நகையை உறுதி செய்யும் வகையில், அதன் கொக்கி அல்லது உட்புற வளையத்தில் '375' என்ற எண் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த எண், அது உண்மையான தங்கம் என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ முத்திரையாகும். யாருக்கெல்லாம் வரப்பிரசாதம்?சின்ன சின்ன நகைகளை வாங்கி அணிய விரும்பும் இளம் பெண்களுக்கு உண்மையில் 9 காரட் தங்க நகைகள் வரப்பிரசாதம்தான். மிகச் சிறந்த கழுத்து செயினை பல லட்சம் கொடுத்து வாங்கிக் கொடுக்க பெற்றோர் முன்வராதபோது, 9 காரட்டில் வாங்கி அணிந்துகொள்ளலாம். எனவேதான், இளம் வயது வாடிக்கையாளர்கள் தற்போது 9 காரட் தங்க நகைகள் மீது மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக, தங்க நகைகள் வாங்குவதில் மிகப்பெரிய தலைமுறை மாற்றமே நிகழப்போகிறது. முன்பெல்லாம் பெண்களுக்கு திருமணத்தின்போது நகைகள் வாங்குவார்கள். ஆனால், மில்லேனியல்ஸ், ஜென்ஸி தலைமுறையினர், திருமணம் வரை காத்திருக்க மாட்டார்கள். அன்றாடம் அணிந்துகொள்ள தங்க நகைகளை வாங்குகிறார்கள். இவர்களது தெரிவில் முதல் இடத்தில் இருப்பது 9 காரட் தங்கம்.முதல் காரணம், 9 காரட் தங்கத்தில் உறுதியான உலோகக் கலவைகள் (alloys) இருப்பதால் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்றது. எளிதில் சேதமடையாது.மற்ற உலோகக் கலவைகளின் கூட்டு காரணமாக 9 காரட் தங்க நகைகள் மிகவும் கடினமானதாக மாறுகிறது. உடைந்துபோகக்கூடிய நுணுக்கமான மற்றும் நவீன வடிவமைப்புகளைக் கூட இதில் எளிதாக உருவாக்க முடியும் என்பதால், நவீன டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன. இதனை வாங்க பெரிய அளவில் சேமிப்பும் தேவையில்லை.நில், கவனி, வாங்கு!விலையும் குறைவு, நாள்தோறும் பயன்படுத்த ஏற்றது, 9 காரட் தங்க நகைகளை வாங்க கிளம்பிவிட வேண்டாம். சில குறைகளும் உள்ளன. அதுபற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலும் இதனை யாரும் சொல்ல மாட்டார்கள்.முதலாவது, இதை ஒரு முதலீடாக, சொத்தாகக் கருத முடியாது.9 காரட் தங்க நகை வாங்குவது சேமிப்பாகவோ, செல்வத்தைப் பெருக்குவதாகவோ, குடும்பச் சொத்தை உருவாக்குவதாகவோ கருதப்படாது.குடும்பத்தில் சொத்து மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்றால், 9 காரட் தங்கத்தை தவிர்ப்பதுதான் நல்லது என்கிறார்கள்.இரண்டாவது22 காரட் நகைகளை வாங்குவதற்கும், 9 காரட் தங்க நகைகளை வாங்குவதற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் விற்கும்போது இன்னும் அதிகமாக இருக்கும்.9 காரட் நகைகளுக்கு செய்கூலி, ஜிஎஸ்டி செலுத்தும் பணத்துக்கான மதிப்பு, மறு விற்பனை செய்யும்போது கிடைக்கும் தொகையை விட மிக அதிகமாக இருக்கும். இது முழுக்க முழுக்க ஒரு அழகு சார்ந்த, அழகாக அணிந்கொள்ள வாங்குவது மட்டுமே.பராமரிப்பிலும் கூடுதல் கவனம்தங்க நகைகள் முதலில் சற்று பளீச்சென்று இருக்கும். பிறகு அதன் நிறம் மங்குமே தவிர, பொன் நிறம் மாறுவதில்லை.ஆனால், 9 காரட் தங்க நகைகளுக்கு சற்றுக் கூடுதல் பராமரிப்பு தேவை என்கிறார்கள்.இதில் தாமிரம் மற்றும் வெள்ளி கலந்திருப்பதால், 9 காரட் தங்க நகைகள் ஆக்ஸிஜனேற்றத்திற்கு (oxidation) உள்ளாகலாம். அணியும்போது, அதிகப்படியான ஈரப்பதம், வியர்வை அல்லது வாசனை திரவியங்கள் பட்டால் இதன் நிறம் விரைவாக மங்கக்கூடும். இதன் பளபளப்பைத் தக்கவைக்க அவ்வப்போது மெருகூட்ட (polish) வேண்டியதும் இருக்கலாம் என்கிறார்கள்.சிலருக்கு மிகவும் சென்சிடிவ் சருமமாக இருந்தால் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். தங்க நகைகளைப் போல் மின்னாமல், சற்று வெளிர் நிறம் தென்படும். எளிமையை விரும்புவோருக்கு சரியான தேர்வாக இருக்கும்.ஆனால், வழக்கமான தங்க நகைகளை அதிகம் விரும்புவோருக்கு, அந்த அடர் மஞ்சள் நிறம் குறைவாகவே இருப்பதால் அவ்வளவு பிடித்தமானதாக இருக்குமா என்பதே சந்தேகமே.இறுதியாக என்னத்தான் சொல்வது? 9 காரட் தங்க நகை வாங்கலாமா? கூடாதா? அது முழுக்க முழுக்க தனிநபர்களின் தேவையைப் பொருத்தது. திருமணத்துக்கான தேவைகளுக்கோ, நிதி சார்ந்த தேவைகளுக்கோ பயன்படுத்துவதாக இருந்தால் 9 காரட் தங்கம் வாங்க முடியாது. கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் அல்லது வீட்டில் அணிந்துகொள்ள வேண்டும், அழகழகாக ஆடைக்கு ஏற்ப வாங்கி அணிந்துகொள்ள வேண்டும்ட என்பதற்காக வாங்குவதாக இருந்தால் 9 காரட் தங்க நகைகள் சிறந்த தெரிவாக இருக்கும்.Amidst the sharp rise in gold prices, is 9-carat gold a boon?