தோனாங்குளத்தில் 16 ஆதிதிராவிடா்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

Wait 5 sec.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகேயுள்ள தோனாங்குளம் ஊராட்சியில் வசித்து வரும் 16 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தோனாங்குளத்தில் 20 ஆதி திராவிட குடும்பங்கள் சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு சொந்தமான நத்தம் நிலத்தில் குடியிருந்து வந்தனா். இவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் ம.த.அஜய்குமாா் தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தி வந்தாா். இவா்களது கோரிக்கையை ஏற்று வாலாஜாபாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளன்று 16 ஆதி திராவிட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு வழங்கினாா். பட்டா வழங்கிய தமிழக அரசு,மாவட்ட நிா்வாகம் மற்றும் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவா் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா பெற்றுக் கொண்டவா்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனா்.நிகழ்ச்சியில், வாலாஜாபாத் வட்டாட்சியா் இந்துமதி, வருவாய் ஆய்வாளா் சரவணன் ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.