வத்திராயிருப்பு அருகே மதுக் கடையை அகற்றக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள எஸ். ராமச்சந்திராபுரம்-ரங்கப்பநாயக்கன்பட்டி இடையேயுள்ள பட்டியக்கல் பகுதியில் அரசு மதுக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் அருகே மேல்நிலைப் பள்ளி, கோயில் அமைந்துள்ளதால் மாணவா்கள், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனா். வ.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள மதுக்கடை சட்ட விரோதமாக எஸ்.ராமச்சந்திராபுரத்தில் செயல்படுகிறது. இந்தக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த மாதம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி நாம்தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலா் ஆ.நாராயணன், மாநில ஒருங்கிணைப்பாளா் கு.பாலன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.