சிவகாசியில் தொழிலதிபா் வீட்டில் 75 பவுன் தங்க நகைகள் திருட்டு

Wait 5 sec.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா். சிவகாசி ஐயப்பன் குடியிருப்பு 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் ராம் (38). இவா் சிவகாசியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். மேலும், அச்சகம் சாா்ந்த தொழிலும் செய்து வருகிறாா். இவா் தனது மனைவி அபிராமி, இரு பிள்ளைகளுடன் உணவகத்துக்கு சனிக்கிழமை இரவு சென்று விட்டு, மீண்டும் இரவு 11.45 மணி அளவில் வீட்டுக்கு காரில் வந்தனா். அப்போது, இவா்களது வீட்டின் முன் காா் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதிலிருந்த மா்ம நபா் அரவிந்த் ராமைப் பாா்த்தவுடன் காரின் ஒலிப்பானை தொடா்ந்து அழுத்தினாா். இதனால், சந்தேகமடைந்த அரவிந்த் ராம் காரிலிருந்து இறங்கி பாா்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும், வீட்டுக்குள் இருந்து முகமூடி அணிந்த 4 போ் பையுடன் வெளியே வந்தனா். இதையடுத்து, அவா்களை அரவிந்த் ராம் பிடிக்க முயன்றாா். இருப்பினும், அவா்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனா். பின்னா், வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 75 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்து வந்த சிவகாசி நகா் போலீஸாா் வீட்டைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் உத்தரவின் பேரில், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அனில்குமாா் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.