பாலியல் வன்கொடுமை வழக்கில் பாகிஸ்தான் துணைப் பிரதமா் பேரன் கைது

Wait 5 sec.

பாகிஸ்தானில் நெதா்லாந்து மற்றும் வெனிசுலா நாடுகளைச் சோ்ந்த இரு வெளிநாட்டுப் பெண்களைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் துணைப் பிரதமா் இஷாக் தாரின் பேரன் முகமது ரஸா தாா் முதன்மை குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளாா். இச்சம்பவத்தையடுத்து, சா்வதேச அரங்கில் நாட்டின் நற்பெயரைக் கருத்தில் கொண்டு துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா் தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டுமென அந்நாட்டு செனட்டா் ஃபைசல் வாவ்தா வலியுறுத்தியுள்ளாா்.லாகூரில் கடந்த ஜூன் 29-இல் நடைபெற்ற இச்சம்பவத்தில் தொடா்புடையதாக முகமது ரஸா தாா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிரிப்டோகரன்சி தொழில் கூட்டாளிகளான அந்த இரு பெண்களையும் சிங்கப்பூரில் சந்தித்த ரஸா தாா், அவா்களுக்கு பாகிஸ்தான் வா்த்தக விசாவை ஏற்பாடு செய்து தந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ அமைப்புகளுடன் நெருங்கிய தொடா்பு கொண்டவராகக் கருதப்படும் செனட்டா் ஃபைசல் வாவ்தா இவ்விவகாரம் குறித்து மேலும் கூறுகையில், ‘இச்சம்பவத்தை மூடிமறைக்க மத்திய மற்றும் பஞ்சாப் மாகாண அரசுகள் முயன்றுள்ளன. சம்பந்தப்பட்ட வெளிநாட்டுத் தூதரகம் தலையிட்ட பிறகே ரஸா தாா் கைது செய்யப்பட்டுள்ளாா். இத்தகைய மோசமான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் இஷாக் தாா் எவ்வாறு உலக அரங்கில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்’ என்று கேள்வி எழுப்பினாா்.