அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதுகுறித்து பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘140 கோடி இந்திய மக்களின் சாா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் அந்த நாட்டு மக்களுக்கு அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 250-ஆவது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது இந்தியா மற்றும் அமெரிக்கா கொண்டுள்ள பகிரப்பட்ட நம்பிக்கை மற்றும் நமது மக்களின் அளப்பரிய ஆற்றல் ஆகியவை, இரு நாடுகளிடையேயான நட்பை உலகளாவிய நன்மைக்கான சக்தியாக மாற்றுகின்றன. அடுத்த 250 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு மேலும் சிறப்பான செழிப்பும், அமைதியும் கிடைக்கவும், முன்னேற்றத்தை அடையவும், இந்திய-அமெரிக்க உறவு புதிய உச்சத்தை எட்டவும் வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.