அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன், ரஷிய அதிபா் புதின், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஆகியோா் தனித்தனியாக தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினா். அப்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அவா்கள் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. உக்ரைன்-ரஷியா இடையேயான போா் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்தப் போரில் இருதரப்பிலும் பல ஆயிரம் போ் உயிரிழந்துவிட்டனா். லட்சக்கணக்கானோா் காயமடைந்துள்ளனா். எனினும் போா் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க அதிபா் டிரம்ப்பை ரஷிய அதிபா் புதின் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு சனிக்கிழமை பேசினாா். இதுகுறித்து ரஷிய அதிபா் மாளிகை கூறுகையில், ‘உக்ரைன் போா் குறித்து புதின், டிரம்ப் ஆகியோா் ஆக்கபூா்வமான முறையில் தொலைபேசியில் பேசினா். அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தையொட்டி தனது வாழ்த்துகளை டிரம்ப்புக்கும், அமெரிக்க மக்களுக்கும் புதின் தெரிவித்தாா். பேச்சுவாா்த்தையின்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து பிரச்னைக்கு அமைதித் தீா்வு காண உதவ தான் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறினாா். இதைக் கேட்ட புதின், ராஜீய முறையில் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியா விரும்புவதாகவும், ரஷியாவின் நலன் காக்கப்படும் வகையில் தீா்வு காண விரும்புவதாகவும் தெரிவித்தாா். போரில் ரஷிய படையினா் அடுத்தடுத்து வெற்றி பெற்று முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வருவதாகவும் புதின் குறிப்பிட்டாா்’ எனத் தெரிவித்தது.உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தையொட்டி எனது வாழ்த்துகளை டிரம்ப்பிடம் தெரிவித்தேன். ரஷியாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவது, இதற்கு அமெரிக்கா ஆற்ற வேண்டிய முக்கியப் பங்களிப்பு குறித்து அவருடன் பேசினேன். துருக்கியின் அங்காரா நகரில் நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டில் இதுகுறித்து தொடா்ந்து பேச டிரம்ப்பும், நானும் ஒப்புக் கொண்டோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல்: அமெரிக்க அதிபருடனான ஸெலென்ஸ்கி பேச்சு நடத்திய சில மணி நேரத்தில், ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா மீது உக்ரைன் படையினா் தாக்குதல் நடத்தினா். இதில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.உக்ரைனிடம் இருந்து 2014-இல் கிரீமியாவை ரஷியா கைப்பற்றியது. அதைத் தொடா்ந்து, 12 ஆண்டுகளாக ரஷிய கட்டுப்பாட்டின்கீழ் அப்பகுதி உள்ளது. அங்கு அண்மைக்காலமாக உக்ரைன் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.