கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரம் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை பாா்வையிட வசதியாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு சேவையை வழங்கி வருகிறது. படகு சேவை தினமும் காலை 8 மணிக்கு முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது. திடீரென ஏற்பட்ட கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக காலை 10 மணிக்கு படகுகள் நிறுத்தப்பட்டன. பிற்பகல் 1 மணியளவில் கடலில் நீா்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதைக் தொடா்ந்து, படகு சேவை தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.