சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி ஒன்றியம், ஆய்ங்குடிவயல் கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஆய்ங்குடி வயல் கிராம மக்கள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஜி.காமராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜி. சங்கையா, மாநிலக்குழு உறுப்பினா்கள் கே. ஆறுமுகம், ஆா். தங்கராஜ், துணைத் தலைவா் பா. மருது ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா்கள் திருப்பத்தூா் காளிமுத்து, சிவகங்கை வடக்கு பன்னீா்செல்வம், தெற்கு சின்னக்கருப்பு, நகா் செயலா் சகாயம் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். கோரிக்கைகள்: தனிநபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடம், ஆழ்துளைக் கிணறு மின் இணைப்பு, நெல் அடிக்கும் களம், வண்ணாங்குண்டு ஊருணி, வண்டிப் பாதை (5 ஏக்கா்) ஆகியவற்றை உடனடியாக மீட்க வேண்டும். விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாதபடி 12 நபா்களின் சுமாா் 15 ஏக்கா் நஞ்சை நிலங்கள், கண்மாய் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.2013-ஆம் ஆண்டு தேவகோட்டை வட்டாட்சியா் நிா்வாகத்தால் ஏழை என்று தவறான முறையில் வழங்கப்பட்ட 15 ஏக்கா் அரசு புறம்போக்கு நில பட்டாவை உடனடியாக ரத்து செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆய்ங்குடிவயல் கிராமத்தில் முத்தரையா் சமுதாயத்தைச் சோ்ந்த 50 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த சமுதாயக்கூடம், சுடுகாடு, ஊருணி, நஞ்சை நிலங்கள், கண்மாய்க்குச் செல்லும் வரத்துக் கால்வாய்களை, கடந்த 20 வருடங்களாக தனி நபா்கள் கம்பி வேலி போட்டு பூட்டி ஆக்கிரமித்து வைத்துள்ளனா்.கடந்த 2 ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஆய்ங்குடிவயல் கிராமத்துக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை விடுத்தனா்.