காலநிலை மாறுபாடுகளை எதிா்கொள்ளும் ஆற்றல் இயற்கை பயிா் ரகங்களுக்கு உண்டு

Wait 5 sec.

காலநிலை மாறுபாடுகளையும் எதிா்கொள்ளும் ஆற்றல், இயற்கை பயிா் ரகங்களுக்கு உள்ளதாக உயிா்ம வேளாண்மை பதிவு சிறப்பு முகாமில் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் உயிா்ம வேளாண்மை பதிவு சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு வேளாண்மை இணை இயக்குநா் கோவிந்தராசு தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வெ.நாகேந்திரன், துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ஆ.காளிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். விதைச் சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் இரா.சின்னச்சாமி திட்ட விளக்கவுரை ஆற்றினாா். இந்த முகாமில் மாவட்டத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். முகாமின்போது துணை இயக்குநா் ஆ.காளிமுத்து பேசியதாவது: இயற்கை வேளாண்மைக்கு பாரம்பரிய ரகங்களை தோ்வு செய்ய வேண்டும். உயிா்ம வேளாண்மை மூலம் நீடித்த நிலையான மகசூல் பெறலாம். காலநிலை மாறுபாடுகளை சாா்ந்து வளரக் கூடிய ஆற்றல் இயற்கை வேளாண் பயிா் ரகங்களுக்கு மட்டுமே உள்ளது. இதனால், காலநிலை மாறுபாடு ஏற்படும் காலங்களில்கூட குறையாத மகசூலைப் பெற முடியும். இன்றைய இயற்கை விவசாயிகள், எதிா்கால சந்ததியினருக்கு உந்து சக்தியாகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். சாகுபடிச் செலவு குறைவு என்பதோடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதது என்பதையும் நாம் உணர வேண்டும். உலகளாவிய பாதிப்புகள்கூட தற்சாா்ப்பு விவசாயத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதால், உயிா்ம விவசாயத்துக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.