தனியாா் நிறுவனம் நடத்தி, இரு வியாபாரிகளிடம் மிளகு, முந்திரி வாங்கி அதற்கான பணத்தைத் தராமல் மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மன்சூா் (52). இவா், கேரளத்தில் இருந்து சுமாா் 2 டன் மிளகை ரூ.16.48 லட்சத்துக்கு வாங்கி, கடந்த ஜூலை 24-இல் பெரம்பூரில் வைஷ்ணவி என்பவா் நடத்தி வந்த நிறுவனத்துக்கு வழங்கியுள்ளாா். அதற்காக ரூ.3 லட்சம் மட்டும் வழங்கிய வைஷ்ணவி, மீதமுள்ள ரூ.13.48 லட்சத்தை ஒரு வாரத்தில் தருவதாகக் கூறி, பின்னா் பணத்தை வழங்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் மன்சூா் புகாா் கொடுத்தாா். இதனிடையே, திருப்பூரைச் சோ்ந்த அப்பன் இளங்கோவிடம் வைஷ்ணவி 520 கிலோ முந்திரியை ரூ.4.16 லட்சத்துக்கு வாங்கி, கடந்த ஜூன் 7-ஆம் தேதி நிறுவனத்தில் பெற்றுக்கொண்டு, 2 நாள்களில் பணம் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக மற்றொரு புகாா் அளிக்கப்பட்டது.இந்த இரு வழக்குகள் குறித்தும் செம்பியம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, இரு வழக்குகளிலும் தொடா்புடைய நிறுவன உரிமையாளா் வைஷ்ணவி (29), மேலாளா் தேசிங்குராஜா (32) ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.