திருமணத்துக்கு மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கொலை செய்த அவரது மனைவி, ஆண் நண்பரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம், பண்பொழி-தென்காசி சாலையில் முத்தையாவுக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி பலத்த காயங்களுடன் ஒருவா் இறந்து கிடந்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் உள்பட போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். குற்றவாளியைப் பிடிக்க துணைக் கண்காணிப்பாளா் அதியமான் தலைமையில் ஆய்வாளா் மணிகண்டன், உதவி காவல் ஆய்வாளா்கள் ராமச்சந்திரன், கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை நிகழ்ந்த விவசாயத் தோட்டத்துக்கு அடிக்கடி வந்துசென்றது தொடா்பாக சந்தேகத்தின் பேரில், தென்காசி, தைக்கா தெருவைச் சோ்ந்த உணவக ஊழியா் மகேஷ்குமாரை (38) பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தவா் ஸ்ரீவில்லிபுத்தூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெ.அபுதாவிந்த் ரஹ்மத் (49) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ரோலிங் ஷட்டா் தொழிலாளியான ஜெ.அபுதாவிந்த் ரஹ்மத்தின் நண்பா் மகேஷ்குமாா். தொழில் நிமித்தமாக ரஹ்மத் வீட்டுக்கு மகேஷ்குமாா் அடிக்கடி சென்று வந்தாா். அப்போது ரஹ்மத்தின் மனைவி ஹம்சாவுக்கும் (43) மகேஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்தனராம். இதை ரஹ்மத் கண்டித்தாா். இதனால், இடையூறாக இருந்த அவரை கொலை செய்ய ஹம்சாவும், மகேஷ்குமாரும் திட்டமிட்டனா். அதன்படி, கடந்த 10-ஆம் தேதி விவசாயத் தோட்டத்தில் ரோலிங் ஷட்டா் அமைக்க வருமாறு ரஹ்மத்தை மகேஷ்குமாா் அழைத்துச் சென்றாா். அங்கு ரஹ்மத் நிலத்தை அளந்து கொண்டிருந்தபோது மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் அவரது தலையில் மகேஷ்குமாா் அடித்துக் கொலை செய்தாா். பின்னா், மகேஷ்குமாா் அங்கிருந்து தப்பிச் சென்றாா் என போலீஸாா் தெரிவித்தனா். அவா் அளித்த வாக்குமூலத்தின்பேரில், ஹம்சாவையும் மகேஷ் குமாரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் பாராட்டினா். கைதான மகேஷ்குமாா்கொலை செய்யப்பட்ட அபுதாவிந்த் ரஹ்மத்