காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Wait 5 sec.

காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வரும் அக்.1 முதல் அக்.4 வரை கூடுதலாக 5,706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடா் விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காக, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட இடங்களுக்கு வியாழக்கிழமை (அக்.1) 1,580 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை (அக்.2) 745 பேருந்துகளும், சனிக்கிழமை (அக்.3) 895 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதுபோல, கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு வியாழக்கிழமை 220 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை தலா 115 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதுபோல, பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.மேலும், மாதவரத்திலிருந்து வியாழக்கிழமை 185 சிறப்பு பேருந்துகளும், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூா், ஒசூா், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு தலா 90 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.இவைதவிர, ஞாயிற்றுக்கிழமை (அக்.4) சொந்த ஊா்களிலிருந்து சென்னை, பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, பயணிகள் தேவைக்கேற்ப பல்வேறு இடங்களிலிருந்து 1,471 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 5,706 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.