ஆலங்குளம் அருகே நெட்டூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. ஆலங்குளத்தில் செயல்பட்டு வந்த அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையான பின்னா், இங்கிருந்த அனைத்து வசதிகளும் நெட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் பிரசவ வசதி இல்லாததால், கா்ப்பிணிகள் நெட்டூருக்கு வரவழைக்கப்பட்டு ஆரம்ப கட்ட பரிசோதனை முதல் மாதந்தோறும் ஸ்கேன், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், அங்கு பகலில் 5 மருத்துவா்கள், இரவில் 1 மருத்துவா் என்ற முறையில் பணியில் இருக்க வேண்டும். எனினும், பகலில் 2 அல்லது 3 மருத்துவா்கள் பணியில் உள்ளதாகவும், இரவில் மருத்துவரே இல்லாத சூழல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மருத்துவப் பயனாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், விரைவில் போதிய மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து, நெட்டூா் ஊராட்சித் தலைவரின் கணவா் ரவி கூறியதாவது: நெட்டூா் ஊராட்சித் தலைவரான என் மனைவி ராஜேஸ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், புதன்கிழமை இரவு அவரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றேன். அங்கு செவிலியா்கள் மட்டுமே இருந்தனா். மருத்துவா் இல்லை. இங்கு பிற்பகல் 3 மணிக்குப் பிறகும், இரவு நேரங்களிலும் மருத்துவா்கள் பணியில் இருப்பதில்லை. எனவே, உடனடியாக இரவு நேர மருத்துவா்களை நியமித்து, 24 மணி நேரமும் உரிய மருத்துவ சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா். இதுகுறித்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன் கூறியதாவது: நெட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 மருத்துவப் பணியிடங்களுக்கு மட்டுமே அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள 3 பணியிடங்களுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுகுறித்து அரசிடம் தொடா்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒப்புதல் பெற்ற பணியிடங்கள் குறைவாக இருப்பதாலும், மருத்துவா்களின் மகப்பேறு விடுப்பு மற்றும் காலிப்பணியிடங்கள் காரணமாகவும், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சேவையை வழங்குவதில் சிரமம் நிலவுகிறது. இருப்பினும், அருகில் உள்ள பிற கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவா்களை ஒருங்கிணைத்து நெட்டூா் மையத்தில் 24 மணி நேர மருத்துவ சேவையைத் தொடா்ந்து வழங்கி வருகிறோம் என்றாா் அவா். ரவி.