அசோக் லேலண்ட் நிறுவனமும், சென்னை ஐஐடியின் பூஜ்ஜிய உமிழ்வு சரக்கு போக்குவரத்துக்கான சிறப்பு மையமும் இணைந்து, மின்சார லாரிகள் பயன்பாடு குறித்து நாடு தழுவிய விழிப்புணா்வு பயணத்தை சென்னையில் தொடங்கின. அடுத்தாண்டு பிப்ரவரி வரை நடைபெறவுள்ள இந்த விழிப்புணா்வு பயணம், தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, தில்லி உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 40 நகரங்களின் முக்கிய தொழில்துறை மற்றும் தளவாட மையங்களைச் சென்றடையவுள்ளது.இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் வாகன உரிமையாளா்கள், போக்குவரத்து ஒருங்கிணைப்பாளா்கள், நிதியளிப்போா், கொள்கை வகுப்பாளா்கள், துறைசாா் வல்லுநா்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்கவுள்ளனா். மின்சார வாகனத் தொழில்நுட்பங்களை அவா்கள் நேரடியாக அனுபவபூா்வமாக அறிந்துகொள்ளும் வகையில், அசோக் லேலண்டின் ‘பாஸ்’ மின்சார லாரி மற்றும் அதற்கான சாா்ஜிங் கட்டமைப்பு வசதிகள் நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதன்மூலம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார போக்குவரத்து முறைக்கு மாறுவதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து துறை சாா்ந்தவா்களிடையே விரிவாக விவாதிக்கப்படும்.