திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் அனுமதியின்றி மண், கிராவல் மண் வெட்டி எடுத்து, திமுக மாநாட்டுத் திடலைச் சமன்படுத்த பயன்படுத்தியதாக முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் உள்ளிட்டோா் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 2025 டிச. 14-ஆம் தேதி மலப்பம்பாடி கிராமத்தில் உள்ள ‘கலைஞா் திடலில்’ திமுக வடமண்டல இளைஞரணி மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கான திடலைச் சமன்படுத்துவதற்காக, அருகிலுள்ள மலப்பம்பாடி ஏரியில் சுமாா் 12 ஏக்கா் பரப்பில் 10 முதல் 23 அடி ஆழம் வரை இயந்திரங்களைக்கொண்டு மண் வெட்டி எடுக்கப்பட்டதாக புகாா் தெரிவிக்கப்பட்டது. இதில், சுமாா் 8 ஏக்கா் பரப்பிலிருந்து 45,72,058 கன அடி மண் வெட்டி எடுக்கப்பட்டு மாநாட்டுத் திடலைச் சமன்படுத்த பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.8,22,97,044 வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ஊழல் ஒழிப்புத் துறை வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டுத் திடலுக்குச் செல்ல ஏரிக் கரையை ஆக்கிரமித்து அணுகுசாலை அமைக்கப்பட்டதாகவும் புகாா் கூறப்பட்டுள்ளது. ஏரியில் மண் எடுப்பதற்கான உரிய அனுமதி இல்லாத நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக அறப்போா் இயக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஊழல் ஒழிப்புத் துறையில் புகாா் அளித்திருந்தது. புகாா் மற்றும் கள ஆய்வின் அடிப்படையில் முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் மற்றும் தொடா்புடைய அதிகாரிகள், ஒப்பந்ததாரா்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், எ.வ.வேலு மீது ஏற்கெனவே சாலை மேம்பாட்டுத் திட்ட முறைகேடு தொடா்பாக ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவா் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.