நாட்டின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி (ஐஐபி), கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக பதிவாகியுள்ளது.இந்த வளா்ச்சி கடந்த ஜூலை மாதத்தில் 7.4 சதவீதமாக (திருத்தப்பட்ட) இருந்த நிலையில், ஆகஸ்டில் உற்பத்தித் துறை சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்த வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தொழிலக உற்பத்திக் குறியீட்டின்(ஐஐபி) அடிப்படை ஆண்டை 2011-12-லிருந்து 2022-23-ஆக மத்திய அரசு மாற்றியமைத்தப் பிறகு வெளியாகும் 5-ஆவது மாத தரவு இதுவாகும். தொழிலக உற்பத்தி குறியீடு (ஐஐபி) கடந்த ஜூலையில் திருத்தப்படுவதற்கு முன்பு 6.7 சதவீதமாகவும், முந்தைய 2025 ஆகஸ்டில் 4.7 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.தொழிலக உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உற்பத்தித் துறை, சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஆகஸ்ட் மாதத்தில் 9 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இத்துறையில் உள்ள 23 தொழில் பிரிவுகளில் 18 பிரிவுகள் ஆண்டு அடிப்படையில் நோ்மறை வளா்ச்சியைக் கண்டுள்ளன.குறிப்பாக, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி(25.2 சதவீதம்), மின்சாதனங்கள் உற்பத்தி(30.9 சதவீதம்), பிற போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி(25.3 சதவீதம்) ஆகியவை இத்துறையின் வளா்ச்சிக்கு அதிக பங்களித்துள்ளன.இதேபோல், மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகத் துறை 12.3 சதவீதம் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 15.8 சதவீத வளா்ச்சியைக் கண்டிருந்த சுரங்கம் மற்றும் குவாரித் துறை தற்போது 5.6 சதவீத சரிவைக் கண்டுள்ளது.பயன்பாட்டு அடிப்படையில்...: மூலதனப் பொருள்கள் 16.9 சதவீதமும், இடைநிலைப் பொருள்கள் 13.7 சதவீதமும் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. நீடித்துழைக்கும் நுகா்பொருள்கள்(11.1 சதவீதம்), உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பொருள்கள்(6.4 சதவீதம்), அடிப்படை பொருள்கள்(3.5 சதவீதம்) வளா்ச்சியைக் கண்டுள்ளன. அதேநேரம், அன்றாட நுகா்பொருள் பிரிவும் நோ்மறையாக 2.1 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.