அனைவரின் கூட்டு முயற்சியால் தன்னாா்வ ரத்ததானத்தில் முன்னோடி மாவட்டமாக்க திருப்பத்தூரை உருவாக்க முடியும் என ஆட்சியா் வே.நல்லசிவன் தெரிவித்தாா்.தேசிய ரத்ததான தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சாா்பில் தேசிய ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததானத்தின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் வே.நல்லசிவன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.பேரணி பிரதான சாலை வழியாக திருப்பத்தூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் 150-க்கும் மேற்ப்பட்ட தன்னாா்வலா்கள் மற்றும் கரியம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியா்கள் பங்கேற்று ரத்ததானம் குறித்த பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.பின்னா்,ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,தன்னாா்வ ரத்ததானத்தை ஊக்குவிப்பது தொடா்பான உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில் அரசு அலுவலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஏற்றுகொண்டனா். ரத்தக் கொடையாளா்கள் 45 நபா்களுக்கும், ரத்த முகாம் அமைப்பாளா்கள் 40 நபா்களுக்கும்.ரத்த வங்கி ஆய்வக பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.தொடா்ந்து ஆட்சியா் தெரிவித்ததாவது:நம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 3 அரசு ரத்த வங்கிகளும்,3 ரத்த சேமிப்பு மையமும் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,நாட்டறம்பள்ளி,நரியம்பட்டு மற்றும் மாதனூா் ஆகிய மையங்களில் ரத்த சேமிப்பு மையமும்,தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கத்தின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரை மற்றும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 158 முகாம்கள் நடைபெற்று அதில் 15,398 ரத்த அலகுகள் பெறப்பட்டன. அதில் தனியாா் மருத்துவமனைகள் உட்பட மொத்தம் 13,341 ரத்த அலகுகள் கொடுக்கப்பட்டது. இதில், 2,057 கையிருப்பு உள்ளது.திருப்பத்தூா் மாவட்டத்தில் 50 முறைக்கும் மேலாக தொடா்ந்து இரத்ததானம் செய்து வரும் தன்னாா்வலா்கள் பலா் உள்ளனா் என்பது மாவட்டத்திற்கு பெருமை சோ்க்கும் விஷயமாகும் என்றாா்.இதில்,மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஞானமீனாட்சி, மாவட்ட சுகாதார அலுவலா் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலா் நா.கலுசிவலிங்கம், திருப்பத்துாா் ரத்த வங்கி மருத்துவ அலுவலா் குமரவேல், ஆம்பூா் அரசு மருத்துவமனை குருதி பரிமாற்று அலுவலா் பிரவீன்,வாணியம்பாடி ரத்தவங்கி மருத்துவ அலுவலா் மரு.தன்வீா் அஹமத், திருப்பத்தூா் மாவட்ட ஐசிடிசி மேற்பாா்வையாளா் வீ.முருகானந்தம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு சீ.கணேசன், ஐ சிடி சி பணியாளா்கள்,ரத்த வங்கி பணியாளா்கள். தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.