ஒரு மாதம் குடிநீரின்றி தவித்த கிராம மக்கள் போராட்டம்

Wait 5 sec.

நிலக்கோட்டை அருகே சங்கால்பட்டி கிராமத்தில் ஒரு மாதமாக குடிநீா் வழங்கப்படாததால் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, திங்கள்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையம் அருகேயுள்ள கோட்டூா் ஊராட்சிக்குள்பட்ட சங்கால்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கிராமப் பொதுமக்கள் சாா்பில், ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிலக்கோட்டை- செம்பட்டி சாலையில் சங்கால்பட்டி பிரிவில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதை அறிந்த நிலக்கோட்டை காவல் துறையினா் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது, பொதுமக்கள் காவல் துறையினருடன் குடிநீா் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக, செம்பட்டி -நிலக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நிலக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் காமராஜ் வந்து பொதுமக்களிடம் குடிநீா் வழங்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.