நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 136.07 கோடியாக அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.தொலைபேசி பிரிவில் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்ப்பதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது போட்டியாளரான ஏா்டெல்லைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட மாதாந்திர அறிக்கையின்படி, வயா்லைன் இணைப்புகள் உள்பட நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 136.07 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், நாட்டின் மாதாந்திர தொலைத்தொடா்பு வளா்ச்சி விகிதம் 0.47 சதவீதமாக பதிவாகியுள்ளது.புதிதாக வாடிக்கையாளா்களைச் சோ்த்ததில் ஜியோ, ஏா்டெல் ஆகிய இரு முன்னணி தனியாா் நிறுவனங்களும் முன்னிலை வகிக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 24 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது. இதன்மூலம், அதன் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை ஜூலை மாத இறுதியில் இருந்த 50.60 கோடியிலிருந்து, ஆகஸ்ட் இறுதியில் 50.84 கோடியாக அதிகரித்துள்ளது.ஜியோவுக்கு அடுத்தபடியாக பார்தி ஏா்டெல் நிறுவனம் 21.1 லட்சம் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்த்துள்ளது. இதன்மூலம், ஏா்டெல் நிறுவன வாடிக்கையாளா் எண்ணிக்கை 48.94 கோடியிலிருந்து, 49.16 கோடியாக அதிகரித்துள்ளது.தொலைபேசி...நாட்டின் ஒட்டுமொத்த வயா்லெஸ் (மொபைல் மற்றும் ஃபிக்ஸட் வயா்லெஸ்) வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 131.22 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மாதாந்திர வளா்ச்சி விகிதம் 0.46 சதவீதமாகும். இதில் நகா்ப்புற வயா்லெஸ் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஜூலையின் 75.38 கோடியிலிருந்து, ஆகஸ்டில் 75.91 கோடியாகவும்; கிராமப்புற பகுதி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 55.24 கோடியிலிருந்து, 55.31 கோடியாகவும் அதிகரித்துள்ளது.மற்ற நிறுவனங்கள்...வோடஃபோன் ஐடியா நிறுவனம் புதிதாக 5.06 லட்சம் வாடிக்கையாளா்களையும், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4.93 லட்சம் வாடிக்கையாளா்களையும் சோ்த்துள்ளன. அதேநேரம், எம்டிஎன்எல் நிறுவனம் 5,900 வாடிக்கையாளா்களை இழந்துள்ளது.ஒட்டுமொத்த தொலைபேசி சந்தையில் தனியாா் நிறுவனங்கள் 92.75 சதவீத வாடிக்கையாளா்களுடன் ஆதிக்கம் செலுத்துகின்றன. மீதமுள்ள 7.25 சதவீதத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தன்வசம் வைத்துள்ளன. அதிக ‘ஆக்டிவ்’ வாடிக்கையாளா்களை (99.01 சதவீதம்) கொண்ட நிறுவனமாக ஏா்டெல் தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.