இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னாட்சியுள்ள, அரசியல் சட்டப்பூர்வ அமைப்பு (அ.ச. பிரிவு 324). தேர்தல் ஆணையம் நிரந்தரமானது; அதனைக் கலைக்க முடியாது. முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக [Chief Election Commissioner (CEC)] சுகுமார் சென் நியமனத்தோடு, 21 மார்ச் 1950 முதல் ஆணையம் செயல்படத் தொடங்கியது. நாட்டின் முதல் இரண்டு பொதுத் தேர்தல்களை (1952,1957) மிகு திறன் நிறைத்து நடத்திக் காட்டிய சென் பதவிக் காலம் 19 டிசம்பர் 1958-இல் நிறைவடைந்தது. அவரைத் தொடர்ந்து தற்போது வரை 25 தலைமைத் தேர்தல் ஆணையர்களது பணிக் காலத்தை நாடு கண்டிருக்கிறது. இப்பட்டியலிலுள்ள ஒரே ஒரு பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். இரமாதேவி மிகச் சிறுகாலமே - 26 நவம்பர் 1990 முதல் 11 டிசம்பர் 1990 வரை மட்டும் – பொறுப்பிலிருந்தார். கடந்த 76 ஆண்டுகளில், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் சிலர் (எ.கா:- டி. சுவாமிநாதன், ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி, டி.என். சேஷன்,போன்றோர்) தேர்தல் ஆணைய விவகாரங்களில் அரசுத் தலையீட்டை உறுதிபட எதிர்த்து நின்றதுடன், ஆணையத்தின் ஒருசார்பற்ற தன்மையையும் நிலைநாட்டியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மைக்கு முதல் பெரும் சவால்இந்திரா காந்தி ஆட்சியில், நாட்டில் மக்களது அடிப்படை உரிமைகளும் முற்றாக முடக்கிவைக்கப்பட்டிருந்த அவசர நிலை அமலில் இருக்கும்போதே நடத்தப்பட்ட 1971 மக்களவைத் தேர்தல், இந்தியத் தேர்தல் ஆணையம் முதன்முதலாக எதிர்கொண்ட ‘அளப்பருஞ்’ சவால் ஆகும். அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர், ஐ.சி.எஸ். அதிகாரி டி. சுவாமிநாதன் அதிகாரம் எதற்கும் அசையாமலையாய் நின்றார். அரசியல் சட்டப்படி தேர்தல் ஆணையத்திற்குள்ள அதிகார வரம்புகளுக்குள் இருந்துகொண்டே ஆளும் அரசு நிர்வாகத்தின் சர்வ அதிகாரங்களையும் மிகு அமைதியாகவும் வெகு திறமையுடனும் எதிர்கொண்டு செயல்பட்டார். மக்கள்‘ அச்சமின்றி வாக்களிக்கலாம்’ (Vote without fear) என்ற ஆணையத்தின் உத்தரவாதம் நாட்டு மக்களனைவரிடமும் சென்றடையச் செய்து கூடுதலான வாக்களிப்பை உறுதி செய்தார். நாடு முழுவதும் தேர்தலை இரண்டு கட்டமாக - நான்கு நாள்களுக்குள் (16 - 20 மார்ச் 1971) திறம்பட நடத்தினார். ஆரவாரமற்ற ஆழ்கடலன்ன அமைதியுடன் அவர் நடத்திக் காட்டிய ஆறாவது மக்களவைக்கான தேர்தல், ஆணையத்தின் மீது மக்களது நம்பகத்தன்மையை, அரசியல் சட்டப்படி ஆணையத்தின் உள்ளுறையும் அதிகாரத்தை, ஆணையத்தின் ஒருசார்பற்ற ஊடுருவ இயலா உறுதிப்பாட்டை உலகறியச் செய்த முன்னுதாரணம்! ஒருவர் மூவரான வரலாறுதேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் - பி.ஜே.பி. கட்சிகள் மாறி மாறித் தாக்குதல் 1. காங்கிரஸ்: ஒன்று - மூன்று - ஒன்று - மூன்றுநாடு விடுதலை பெற்றதிலிருந்து 39 ஆண்டுகளாக, சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை இந்தியாவில் நடத்துவதற்கு ஒரே ஒரு நபர் (சி.இ.சி.) போதுமானவராக இருந்தார். எட்டுப் பொதுத் தேர்தல்கள் - வரலாற்றுச் சிறப்புமிக்க 1971 தேர்தல் உள்பட - ஒற்றை உறுப்பினர் ஆணையத்தாலேயே நடத்தப் பெற்றன. அறுதித் தனிப் பெரும்பான்மையைக் (400 -க்கு மேற்பட்ட மக்களவை இடங்கள்) கொண்டிருந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கும் அரசியலமைப்புச்சட்டத்தால் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் தன்னாட்சியின் புனிதத் தன்மையை உறுதியாக நம்பிய - அரசாங்கத்தின் எந்தவொரு தலையீட்டிற்கும் வளைந்து கொடுக்காத, தன்னடக்கமுள்ள - தலைமைத் தேர்தல் ஆணையர் ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரிக்கும் இடையே ஒரு மௌனப் போராட்டம் ஏற்பட்டது. இதன் விளைவாக 1989 அக்டோபர் 16 -இல் மக்களவைத் தேர்தலுக்குச் சற்று முன்பாக, ராஜீவ் காந்தி அரசு, திடீரென இரண்டு கூடுதல் ஆணையர்களை - வி.எஸ். செய்கல், எஸ்.எஸ். தனோவா- நியமித்தது. முதன்முதலாக ஒருநபர் தேர்தல் ஆணையத்தை 3 பேர் கொண்ட ஆணையமாக உருவாக்கியது. ஆனால், அவர்கள் இருவரும் மூன்று மாதத்திற்கும் குறைவான காலமே (2.01.1990 வரை) பணியிலிருக்க முடிந்தது. காரணம், காங்கிரஸ் 1989 தேர்தலில் தோல்வியைத் தழுவியதுதான். டிசம்பர் 1989 இல் பிரதமரான வி.பி. சிங் - தனது 160 நாள் ஆட்சிக் காலத்திற்குள்- புதிய இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனங்களை ரத்து செய்து, மூன்றை மீண்டும் ஒன்றாக்கினார். சற்றுப் பின்னர் பிரதமரான பி.வி. நரசிம்மராவ் 1993 அக்டோபர் 1இல் - மீண்டும் ஒன்றை மூன்றாக்கும் பழைய கதையைத் தொடரும் போக்கில் – தேர்தல் ஆணையத்திற்கு மேலும் இரண்டு தேர்தல் ஆணையர்களை (01.10.1993 to 30.09.1999) - ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ். கில் ஆகியோரை – ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் நியமனம் செய்தார். ஒன்று மீண்டும் மூன்றானது. ராஜீவ் காந்தி மேற்கொண்ட அவசர கால நியமனங்கள் அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த அவரது அரசின் முயற்சிதான் என்பது அரசியல் ஆய்வாளர்கள் கருத்து. அதேபோலத் தான் நரசிம்மராவ் தனது காலத்தில் ஒருநபர் ஆணையத்தை மீண்டும் மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்றியதும். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையராகத் தனித் தர்பார் (நேர்மையாகத்தான்) நடத்திக் கொண்டிருந்த டி.என். சேஷனுக்குக் கடிவாளம்போட எண்ணிய ரகசியத் திட்டத்துடன், ‘புன்னகையைக்கூட வெளிக்காட்டாத’ நரசிம்ம ராவ் செய்த ‘சைலண்ட்’ முயற்சி அது என்பதை நாடறியும் (இந்த நியமனங்களை எதிர்த்து, டி.என். சேஷன் உச்ச நீதிமன்றம் சென்றதும், உச்ச நீதிமன்றம், அந்த நியமனங்கள் செல்லுபடியாகும் எனத் தீர்ப்பளித்ததும் விரித்தால் பெருகுமன்றோ?) ஆக, தேர்தல் ஆணையத்தைக் கட்டுப்படுத்தும் எண்ணமும் செயலும் தொடங்கியது காங்கிரஸ் காலத்தில்! ஒன்று மூன்றானதும் அவர்கள் காலத்தில்தான்!2. பி.ஜே.பி: மும்முனைத் தாக்குதல்2014 -க்குப் பிறகு அமைந்து தொடரும் பி.ஜே.பி. ஆட்சி, வழக்கமான தேர்தல் அறிவிப்பு நடைமுறைகளை மாற்றுவது; மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் பாரபட்சம் நிகழ்த்துவது; ஆணையர்கள் நியமனம் குறித்த விதிமுறைகளை ஆட்சியினருக்கு நிரந்தரச் சாதகமாக இருக்குமாறு ஏற்படுத்திக் கொள்ளல் போன்ற மும்முனைச் செயல்பாடுகள் மூலம் தேர்தல் ஆணையத்தைத் தனது கட்டுப்பாட்டில் இயங்கச் செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டுகளாகக் கீழ்க்கண்டவை குறிப்பிட உரியவை:2017 குஜராத் தேர்தல் அறிவிப்பு ஒத்திவைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய காலத்தில் அனைத்து மாநிலங்களுக்குமான தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் அறிவிப்பதுதான் மரபாக இருந்து வந்தது. ஆனால், 2017 இல் இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடத்த வேண்டிய அறிவிப்பில், இமாச்சலப் பிரதேசத்தின் தேதிகளை மட்டும் ஆணையம் முதலில் தெரிவித்தது. இந்த நிகழ்வு ஒரு முக்கிய வரலாற்று உதாரணமாகும். குஜராத்தின் தேர்தல் அறிவிப்பைக் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அவசியமான காரணங்களில்லாமல் தாமதப்படுத்தியது. இந்த இடைவெளி, குஜராத்தில் மாதிரி நடத்தை விதிகள் (எம்.சி.சி.) தொடங்குவதற்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள், மானியங்கள் மற்றும் வாக்காளர் ஊக்கத்தொகைகளை அறிவிக்க ஆளும் கட்சிக்குப் பெரிதும் உதவியது, ஆளுங்கட்சிக்கு அடிபணியும் ஒரு "நெகிழ்வான" தேர்தல் கமிஷன் என்பதற்கான ஆதாரம் இந்நிகழ்வு என எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக வாதிட்டன. கட்டுப்பாட்டை உறுதியாக்க ஆணையர்கள் நியமன விதிகளை மாற்றுதல்2023-க்கு முன் எந்தச் சிக்கலுமின்றி ஒன்றிய அரசு பரிந்துரைக்கும் நபரைத் தலைமைத் தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்து வந்தார். மார்ச் 2023 இல் உச்சநீதிமன்றம், அனூப்பாரன்வால் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கின் தீர்ப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்திற்கான பரிந்துரையைச் செய்ய, பிரதமர், எதிர்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகிய மூவர் கொண்ட குழுவை நியமித்தது. ஆனால், தற்போதைய அரசு இந்த நடுநிலையான ஏற்பாட்டைச் சகித்துக் கொள்ளவில்லை. ஒரு புதிய சட்டத்தை 2023இல் அவசரமாக நிறைவேற்றி, மேற்குறிப்பிட்ட தேர்வுக்குழுவில் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ‘பிரதமரால் நியமிக்கப்படும் ஒரு கேபினெட் அமைச்சர்’ எனத் திருத்தம் செய்து, உச்ச நீதிமன்ற ஏற்பாட்டை அப்புறப்படுத்தி, குழுவின் நடுநிலையைச் சாய்த்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம், 2023 இயற்றப்பட்டதன் மூலம் தேர்தல் ஆணையத்தில் பாதிப்பு என்பது வெறும் அரசியல் அழுத்தத்திலிருந்து ஒரு சட்ட ஏற்பாடாகவே மாறிவிட்டது. கொக்கொக்கக் காத்திருந்த தற்போதைய அரசு அடுத்துக் கிடைத்த முதல் வாய்ப்பில் இந்திய தேர்தல் ஆணையராக கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஞானேஷ் குமார் நியமனத்தை மின்னல் வேகத்தில் நிகழ்த்தியது.மின்னல் வேக நியமனம்புதிய சட்டத்தின்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனிப்பெரும் எதிர்க்கட்சியான காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு மார்ச் 14, 2024இல் கூட்டப்பட்டது. காங்கிரஸ் எதிர்ப்பு புறந்தள்ளப்பட்டு, ஞானேஷ்குமார் பெயர் குடியரசுத் தலைவருக்கு அன்றே பரிந்துரைக்கப்பட்டது. அதே நாளில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து நியமன உத்தரவை வெளியிட்டார், உடனே சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் நியமன அறிவிப்பை வெளியிட்டது. மார்ச் 15, 2024 இந்திய தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார். பின்னர், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பதவிக் காலம் 18 பிப்ரவரி 2025இல் முடிவடைந்ததும், அடுத்த நாளே (19 பிப்ரவரி 2025இல்) நாட்டின் 26 ஆவது தலைமைத்தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பொறுப்பேற்றுத் தொடர்கிறார்.IIமூன்றுக்குள் முட்டுதற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையராக நியமனம் பெற்றது, அவரது செயல்பாடுகள், நடுநிலைமை ஆகிய யாவுமே கடுமையான பல தரப்பு குற்றச்சாட்டுகளுக்குக் களம் விரித்துத் தந்து வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருக்கிடையே இடையே 'உள் கருத்து வேறுபாடுகள்' இருப்பதை வெளிச்சப்படுத்தும் வகையில் மிக அண்மையில் ஆங்கில நாளிதழொன்று வெளியிட்ட புலனாய்வுச் செய்தி, நாட்டில் தேர்தல் ஆணையத்தை மையங்கொண்ட ஒரு தீவிர அரசியல் புயலை மீண்டும் உருவாக்கியுள்ளது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் அவர் பதவி குறித்த வழக்கொன்றை இவ்வாரத்தில் விசாரிக்க இருப்பதும் கூடுதல் வெப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.முந்தைய ஆணையர்கள் எவரொருவரும் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் போல முற்றிலும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவே செயல்படுபவராக வெளிப்படையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதே இல்லை என்பது உண்மை. இரண்டு ஆணையர்கள் கோப்புக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளதாக இந்நாளிதழ் வாயிலாக அறியப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் சேர்ந்து உருவாக்கியுள்ள அசாதாரண நிலை அவசரநிலைக் காலத்திலுங்கூடத் தேர்தல் ஆணையம் கட்டிக்காத்து வந்த நம்பகத்தன்மையை பெருஞ்சிதைவுக்குள்ளாக்கியுள்ளது.சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் -SIR- தொடங்கியது முதல்...வாக்காளர் பட்டியல்களைச் சரிபார்த்துப் புதுப்பிப்பது என்ற நோக்கம் கொண்டதாகச் சொல்லப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் - எஸ்ஐஆர் (SIR) - எனும் பூத நடவடிக்கை, 2025 ஜூன் மாதம் பிகாரில் தொடங்கி, பின்னர் மற்ற மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, எஸ்ஐஆர் செயல்பாட்டினால் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்த வரைவு வாக்காளர் பட்டியல்களில் இருந்து 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் திரள்விளைவு, வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ஒரு பெரிய அரசியல் சூறாவளியாக மாற்றியிருக்கிறது.ஏற்கெனவே பரவலாகச் சுழன்றுவரும் இந்த (SIR) சர்ச்சையோடு தொடர்புடையதாகவே புலனாய்வுச் செய்தியால் வெளிப்பட்டுள்ள இரண்டு தேர்தல் ஆணையர்களது கோப்புப் பதிவுகளும் இருப்பதால் தற்போது அரசியல் கட்சிகள் புதுவேகத்துடன் கிளர்ந்து நிற்கின்றன. ‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’; ‘அவரைக் கைது செய்ய வேண்டும்’ என்றெல்லாம் அதீத முழக்கங்கள் செவி நிறைக்கின்றன. (உச்சநீதி மன்ற நீதிபதி அந்தஸ்து கொண்டிருக்கும் இந்தியத் தேர்தல் ஆணையர்களை ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் உடனடியாகப் பதவியிலிருந்து அகற்றிவிட முடியாது. நாடாளுமன்ற இரு அவைகளும் விவாதித்து ஒப்புதல் தந்த பின்னரே பதவி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும்).ஞானேஷ்குமார் தங்களுக்குத் தெரியாமல் எடுத்து வரும் பல முடிவுகளுக்குத் தேர்தல் ஆணையர்கள் சாந்துவும் ஜோஷியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாகக் கோப்புக் குறிப்புகளாக குற்றம் சாட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளிப்பட்டுள்ளன. ஆணையத்தில் நிலவும் இத்தகைய நிலைகுறித்து இரு ஆணையர்களும் இந்திய அரசாங்க உயர்நிலை அதிகாரியான அமைச்சரவைச் செயலாளருக்குப் புகார் தெரிவித்துக் கடிதம்கூட எழுதியதாகவும் கூறப்பட்டு வருகிறது.ஐந்து முக்கியக் கேள்விகள்சமீபத்திய சர்ச்சை என்பது எஸ்ஐஆர் காரணமாகப் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே இரு ஆணையர்களால் எழுப்பப்பட்டுள்ள - அதைவிடவும் கவலை தரும் - ஐந்து முக்கியக் கேள்விகளைச் சுற்றியும் உள்ளது. 1. புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் - 6இல் ‘’அனுமதியற்ற’’ திருத்தம்வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள குடிமக்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்கப் படிவம் 6 இல் விண்ணப்பிக்க வேண்டும். தலைமைத் தேர்தல் தேர்தல் ஆணையர், தங்களுக்குத் தெரிவிக்காமலும், படிவத்தில் மாற்றம் செய்ய உரிய ஒப்புதல் எதுவும் பெறாமலும், படிவத்தில் விண்ணப்பதாரர் அல்லது அவரது பெற்றோர் அல்லது பாட்டன், பாட்டி எவரும் முந்தைய பட்டியலில் இடம்பெற்றிருந்தார்களா என்று கேட்கும் ஒரு புதிய கேள்வியை எஸ்ஐஆர் திருத்தத்தின்போது வழங்கப்படும் படிவம் (6) இல் சேர்த்துள்ளார். இவ்விவரங்கள் அளிக்கப்படாவிட்டால் எண்ணற்ற விண்ணப்பங்கள் நிராகரிப்புக்குள்ளாகின்றன.இவ்விஷயத்தில் தொடர்புடைய விதிகளை மாற்றாமல் படிவம் (6)ஐ தன்னிச்சையாக மாற்ற முடியாது என்று வாதிட்டு, ஜோஷி அந்த மாற்றத்திற்கு எதிர்ப்புப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சாந்துவும் அந்த மாற்றத்தை ‘’அங்கீகரிக்கப்படாதது’’, ‘’சட்டவிரோதமானது’’ என்று கடுமையான சொற்களால் விமர்சித்துத் தனது எதிர்ப்பை எழுத்து மூலமாகப் பதிவு செய்துள்ளார்.2. வாக்காளர் தரவுத்தளக் கட்டுப்பாடுதொகுதி அளவில் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கு ஆங்காங்குள்ள வாக்காளர் பதிவு அலுவலர்கள்தான் (EROs) பொறுப்பானவர்கள். ஆனால், தற்போது டிஜிட்டல் தரவுத் தளத்தை அணுகுவது பெருமளவு மையப்படுத்தப்பட்டுள்ளதால் (centralised) வாக்காளர் பதிவு அலுவலர்களால் உரிய திருத்தங்களை அவ்வப்போது மேற்கொள்வது இயலாததாகி வருவதாகக் கவலை தெரிவித்து சாந்துவும் ஜோஷியும் பதிவு செய்துள்ளனர். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, பாரம்பரியமாக பரவலாக்கப்பட்ட செயல்முறையாகவே இருந்து வந்தது. தற்போது ஓசையின்றித் தேர்தல் ஆணையத்தில் ‘மையப்படுத்தப்பட்ட தரவுதள நிர்வாகத்தின்’ கரங்களுக்குச் சென்றுள்ளது.3.கோவா வாக்காளர் பதிவுச் சிக்கல் மையப்படுத்தப்பட்ட வாக்காளர் தரவு நிர்வாகம் காரணமாக, கோவா வாக்காளர் பதிவில் நிகழ்ந்த ஒரு சிக்கல் குறிப்பிட உரியதாகியுள்ளது. ‘இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு, முரண்பாடுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட வாக்காளர்கள், உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், தங்கள் தரப்பை எடுத்துரைக்கவும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது... ஆனால், அவ்வாறான நடைமுறையின்படி, கோவாவில் 97 வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படத் தகுதியானவர்கள் என உள்ளூர் அதிகாரிகள் கண்டறிந்த பின்னும் அவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கான விருப்பத்தை (Option) தேர்தல் மென்பொருள் அனுமதிக்கவில்லை. இவ்விஷயத்தில் தீர்வு வேண்டி, கோவா தலைமைத் தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகளுக்கு மீண்டும் மீண்டும் கடிதம் எழுதியும், இறுதிப் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு அந்த 97 வாக்காளர் பெயர்கள் சேர்க்கப்படவேயில்லை (மென்பொருள்தான் பிரச்னை!)4. மேற்கு வங்க எஸ்ஐஆர் மேல்முறையீடு மேற்கு வங்காளத்தில் எஸ்ஐஆர் செயல்பாட்டின்போது 27.16 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் முன்னதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதில் 22 லட்சத்திற்கும் அதிகமானோர், தங்கள் பெயர்களை மீட்டெடுக்கக் கோரி மேல்முறையீடு செய்தனர். ஆனால், நீதிமன்ற ஆய்வுக்குப் பிறகு, சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரி 16.10 லட்சம் மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது. இந்த மேல்முறையீடுகளுக்கு யார் அங்கீகாரம் அளித்தது? என்று ஆணையர் சாந்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மேல்முறையீட்டுச் செயல்முறைகள் குறித்து தனக்கும், ஜோஷிக்கும், மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் தகவலே தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.5. தேர்தல் ஆணையத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்.மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் - தலைமைத் தேர்தல் ஆணையருடன், சமஅந்தஸ்துள்ள மேலும் இரண்டு தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கிய அமைப்பாகும். நிறுவனரீதியான கேள்வி யாதெனில், முக்கியமான முடிவுகள் மூன்று உறுப்பினர்களின் முழு அறிதலோடும் ஒப்புதலோடும் எடுக்கப்பட்டு வருகிறதா என்பதே.இந்தியா முழுவதிலும் கோடிக்கணக்கான வாக்காளர்களது பெயர்கள் எஸ்ஐஆர் நடவடிக்கைகளால் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் திருத்த முறையின் நம்பகத்தன்மை குறித்து ஆரம்பத்திலிருந்தே கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. வாக்காளர்களாகப் பதிவு செய்ய எஸ்ஐஆர் வடிவமைத்துள்ள புதிய செயல்முறை மிகவும் சிக்கலானது என்றும், பலரிடம் இல்லாத ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்று பதறும் மக்கள் புகார்கள் குவிந்துள்ளன. தொடர்ந்து நாடு தழுவிய அளவில் தேர்தல் தரவுத்தளத்தை இதே சர்ச்சைக்குரிய வகையில் தேர்தல் ஆணையம் திருத்த முனைப்புக் காட்டி வரும் வேளையில், மேற்குறிப்பிட்டுள்ள புலனாய்வுத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்புகளைக் கூட்டியுள்ளது. தீயணைப்பு நடவடிக்கையாக ஆணையத்தின் செய்திக் குறிப்புகள்நாளிதழில் வெளியான புலனாய்வு செய்தியைத் தொடர்ந்து பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களது அறிக்கைகள் வெளியானவுடன், தேர்தல் ஆணையம் தனது செயல்பாட்டு முறைகளை நியாயப்படுத்தி - தீயணைப்பு நடவடிக்கையாக - இதுவரை இரண்டு செய்திக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது. முதலில் வெளியான 23.9.2026 நாளிட்ட செய்திக்குறிப்பில் (No. ECI/PN/119/2026) ஆணையர்கள் மாறுபட்ட கருத்து தெரிவித்திருப்பது சாதாரணமானதுதான் என்பது போல “எந்தவொரு நிறுவனத்திலும் நடைபெறும் கலந்தாய்வின்போது மாறுபட்ட கருத்துக்களும் அவதானங்களும் இயல்பானவையே. இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர், முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக அவை அமைகின்றன. மூன்று ஆணையர்கள் மட்டுமல்ல, ஆணையத்தின் ஒவ்வொரு அதிகாரியும் தேர்தல் முறையை மேம்படுத்துவதற்காக ஆணையத்திற்குத் தனது பரிந்துரைகளை வழங்க முழு அதிகாரம் பெற்றவர்," என்று தெரிவித்தது.ஆனால், இரண்டாவதாக வெளியிடப்பட்ட 26.9.2026 நாளிட்ட செய்திக் குறிப்பில் (No. ECI/PN/120/2026), பூனைக்குட்டி வெளிக்குதித்ததுபோல. தேர்தல் ஆணையர்கள் இருவரும் பல முறை உள்ளகக் குறிப்புகளாக ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளதாக வெளிவந்த தகவல்கள் சிலவற்றின்மீது- குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலில் உள்ள சிக்கல்கள் களையப்பட; மையப்படுத்தப்பட்ட தரவுதளச் சிக்கல்களை ஆராயக் குழு அமைப்பு போன்ற - சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணையச் செய்திக்குறிப்பு அறிவிக்கிறது. ஆனால் படிவம் 6 குறித்து மழுப்பலான முடிவையே தெரிவித்துள்ளது. எஸ்ஐஆர் நடைமுறையில்லாத இடங்களில் பழைய படிவம் 6 பயன்படுத்தலாமாம் (அப்படியென்றால், எஸ்ஐஆர் நடைபெறும் பகுதிகளில் சிக்கலான தற்போதைய படிவம்தான் போல).நடுநிலையாக இயங்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் மீதான மக்கள் நம்பிக்கையைச் சிதைக்கும் அவலநிலை, அழிவுமுறை காங்கிரஸ் - பி.ஜே.பி. இரு கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும் புகுந்து நிலவி வருகிறது. இதில் எது அதிகச் சீரழிவு என்பதை நாட்டு மக்கள் - கட்சி உணர்வுகளுக்கு அப்பால் நின்று - உண்மையாக மதிப்பீடு செய்ய வேண்டும். சுதந்திரமான நடுநிலையான தேர்தல் ஆணையம்தான் நாட்டில் மக்களாட்சியை ஏதுவாக்கும் பெருங்கருவி; அது காக்கப்பட வேண்டும். [கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்] இந்தியச் செம்மொழி இலக்கியங்களில் அடிநாத ஒருமைப்பாடு ஏதுமில்லை!History of the Election Commission of India and conflict prevailing the current Election Commissioners