விலங்கினும் கீழோர்!

Wait 5 sec.

தில்லி-என்சிஆர் பகுதிகளில் அண்மைக்காலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் மட்டும் தில்லியில் குறைந்தது 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.அண்மையில் தென்கிழக்கு தில்லியில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆஸ்தா குஞ்ச் பூங்கா சம்பவத்தில் 17 வயது சிறுமியை ஆசிஃப், ஹேமந்த், அவரின் சகோதரர் மணீஷ் ஆகியோர் தங்களைக் காவல் துறையினர் என்று கூறிக் கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தை கவனத்தில்கொண்ட உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தது. மேலும், இந்த பாலியல் வன்கொடுமை 2012-ஆம் ஆண்டு தெற்கு தில்லியில் நிகழ்ந்த நிர்பயா சம்பவத்துக்கு நிகரானது என்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் குறிப்பிட்டனர்."பூங்காக்கள், சாலைகள், பேருந்துகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் நடைமேம்பாலங்கள் போன்ற பொது இடங்கள் போதிய வெளிச்சம், கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் இல்லாததால் அவை ஆபத்தான பகுதிகளாக மாறுவதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புணர்வு தேவை' என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.கிரேட்டர் நொய்டாவில் கடந்த மாதம், ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி அந்தப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பழைய தில்லியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் கஷ்மீர் கேட் அருகே இறக்கி விடப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் 17 வயது சிறுமி ஸ்வரூப் நகர் பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.பிகாரின் ஜமுய் நகரில் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு மாணவியும், அவரது வகுப்புத் தோழரும் பயிற்சி வகுப்புக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் சாலையில் ஒரு கும்பலால் வழிமறிக்கப்பட்டனர். அந்தக் கும்பல் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன், அதைக் கேமராவிலும் பதிவு செய்தது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் உள்பட பலரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.பிகாரின் ஜகத்சிங்பூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓர் இளம்பெண்ணை மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் பட்டப்பகலில் வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்து, தள்ளிவிடும் விடியோ வெளியானது. இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.பிகாரின் பெகுசராயில் கடந்த ஜூன் மாதம், நான்கு குழந்தைகளின் தாயை வீடு புகுந்து ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக தாக்கிய சம்பவமும் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது.உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் ஒரு பண்ணை வீட்டில் 25 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிஆர்பிஎஃப் ஆய்வாளர், தலைமைக் காவலர், உத்தர பிரதேச காவல் உதவி ஆய்வாளர், ஒரு காவலர் கைது செய்யப்பட்டனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.தில்லி, பிகார், உத்தர பிரதேசம் மட்டுமல்ல, நாடு முழுவதுமே பொது இடங்களிலேயே பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளியான 5-ஆம் வகுப்பு மாணவியை ஒரு கும்பல் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தது. சிறுமி சப்தமிடவே, அவரின் வாயில் துணியை வைத்துப் பொத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.இந்தியாவில் இதுபோன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைச்சம்பவங்கள், பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள் அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் கவலையை, அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தவறு செய்தால் தண்டனைக்குள்ளாவோம் எனத் தெரிந்தும், இது போன்ற பாலியல் தாக்குதலில் ஈடுபடுவதற்கு காவல் துறையின் கண்காணிப்புக் குறைபாட்டையே பிரதான காரணமாகக் குறிப்பிடத் தோன்றுகிறது.பெண்கள் மீதான, குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இன்னமும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. போக்úஸô வழக்குகளில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் தண்டிக்கப்படும் விகிதமும் 40 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது. விசாரணை மற்றும் வழக்கு தொடுத்தல் ஆகியவற்றில் உள்ள கட்டமைப்பு ரீதியான சவால்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுக்கின்றன என்பதைத்தான் இது உணர்த்துகிறது.நாடு முழுவதுமே பொது இடங்களில் பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல் துறையின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் விடியோ ஆதாரம் இருந்தும் உடனடி நடவடிக்கை எடுப்பதில் காவல் துறை தாமதம், புகார் வந்தாலும் தொடரும் அலைக்கழிப்பு போன்ற சாபக்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் இதுபோன்ற கொடுமைகளைக் குறைக்க முடியும்.மக்களே போல்வர் கயவர்; அவரன்னஒப்பார் யாம்கண்டது இல்.மக்களே போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகை பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.திருக்குறள் (எண் 1071) அதிகாரம்: கயமை