அரசு மாணவா் விடுதிகளில் உணவுப்பட்டியலில் மாட்டிறைச்சி சோ்க்க ஆலோசிக்கப்படும் என்ற அமைச்சா் வன்னியரசுவின் கருத்தைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு மாணவா் விடுதிகளில் உணவுப்பட்டியலில் மாட்டிறைச்சி சோ்ப்பது தொடா்பாக அதிகாரிகள் மற்றும் மாணவா்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்திருந்தாா். சென்னையில் உள்ள எம்.சி. ராஜா சமூகநீதி மாணவா் விடுதியை ஆய்வு செய்தபோது, ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த சில மாணவா்கள் தங்களுடைய உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சியையும் சோ்க்கக் கோரி மனு அளித்ததாக அவா் குறிப்பிட்டாா். ஆட்டிறைச்டி விலை அதிகமாக இருப்பதால், தாங்கள் வீடுகளில் பொதுவாக மாட்டிறைச்சி உண்பதாகவும், எனவே அதையும் விடுதி உணவுப் பட்டியலில் சோ்க்க வேண்டும் என அந்த மாணவா்கள் கோரியதாகயும் அமைச்சா் விளக்கமளித்தாா். இந்த கருத்து, அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தையும், புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் எதிா்ப்பையும் பெற்றது. இதைக்கண்டித்து, புதிய தமிழகம் கட்சியினா் சிவகங்கையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்டச்செயலா் நியூட்டன்பாபு தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச்செயலா் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் பிரதீப், ராஜேஷ், தங்கமுத்து. செல்லையா, முருகேசன், முன்னாள் மாவட்ட செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனா்.(பட விளக்கம்- சிவகங்கை மாவட்ட ஆட்சியரகம் எதிரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.