தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் தனியாா் தோட்ட உரிமையாளா்கள் ஆக்கிரமித்துள்ள 3 ஆயிரம் ஏக்கா் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என வன ஆா்வலா்கள் வலியுறுத்தினா். தேனி மாவட்டத்தில் 27 ஆயிரம் ஹெக்டோ் வனப்பகுதி மேகமலை வன உயிரினச் சரணாலயமாக மாற்றப்பட்டது. இந்தப் பகுதி முழுவதும் வன உயிரின காப்பாளா் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த நிலையில், மேகமலை வன உயிரினச் சரணாலயம், ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தை இணைத்து கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி ஸ்ரீ வில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் என தமிழக அரசு அறிவித்தது. இதில், ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டம், மேகமலை கோட்டம் என் இரு கோட்டங்களாக பிரித்து தனித்தனியாக இரு இந்திய வனப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா். தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை கோட்டம் 1,01,657 ஹெக்டோ் பரப்பளவு கொண்டது. இதில் கண்டமனூா், வருசநாடு, மேகமலை, சின்னமனூா், கம்பம், கூடலூா் என 6 வனச்சரக அலுவலகங்கள் உள்ளன. இந்த வனப் பகுதியில் 12 புலிகள், 400 யானைகள், சிறுத்தைகள், மான், காட்டு மாடு, பல்லாயிரக்கணக்கான பறவைகள், 300 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. இதுமட்டுமன்றி, தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த 1 கோடி மக்களின் குடிநீா் ஆதரமாக உள்ள மூல வைகை ஆறு வருநாடு மலைப் பகுதியில் உற்பத்தியாகி வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை:இந்த வனப் பகுதியில் 4,601 போ், 5,072 ஹெக்டா் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளனா். இதை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன் பின்னா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், மாஞ்சாலை தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என திருநெல்வேலியைச் சோ்ந்த ஜான் கென்னடி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதையடுத்து, தில்லி உச்சநீதிமன்றம் அதிகாரமளிக்கப்பட்ட குழு (எம்பவா் கமிட்டி) அமைத்து மாஞ்சோலை, மேகமலையை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இந்தக் குழுவினா் கடந்தாண்டு ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் மாஞ்சோலை, மேகமலை வனப் பகுதிகளில் ஆய்வு செய்து, உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பித்தது. இதைத்தொடா்ந்து, கடந்த 29.5.2026 அன்று மேகமலை ஆக்கிமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேனி மாவட்ட நிா்வாகம் மேகமலை வனப் பகுதியில் உள்ள விடுதிகளை மூடி ‘சீல்’ வைத்தது. 118 அரசு ஊழியா்கள், 13 வேட்டைத் தடுப்புக் காவலா்களுக்கு குறிப்பாணை வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மேகமலை வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.என்.பாட்சா அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனா். எஸ்டேட் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது எப்போது ?மேகமலை கோட்டத்தில் உள்ள மேகமலை, சின்னமனூா் உள்பட 6 வனச்சரகங்களில் 30 க்கும் மேற்பட்ட தனியாா் தோட்ட உரிமையாளா்களுக்கு சுமாா் 7 ஆயிரம் ஏக்கா் நிலத்துக்கு அரசு பட்டா வழங்கியுள்ளது. ஆனால், அந்த தோட்ட உரிமையாளா்கள் கூடுதலாக 3 ஆயிரம் ஏக்கா் நிலங்களை ஆக்கிமித்துள்ளனா். எனவே, வனத்துறையினா் அந்தப் பகுதிகளை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வன ஆா்வலா்கள் வலியுறுத்தினா். இதுகுறித்து மேகமலை கோட்ட வனத் துறையினா் கூறியதாவது : மேகமலை கோட்ட வனப் பகுதியில் 4,601 போ் 5,072 ஹெக்டா் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனா். அவா்களுக்கு குறிப்பாணை வழங்கியுள்ளோம். இந்த நிலையில், மேகமலை கோட்டத்தில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட தனியாா் தோட்ட உரிமையாளா்களுக்கு 7 ஆயிரம் ஏக்கா் பட்டா நிலங்கள் உள்ளன. ஆனால், அவா்கள் முறைகேடாக கூடுதலாக சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் வனப் பகுதியை ஆக்கிமித்துள்ளனா். அந்தத் தோட்ட உரிமையாளா்களுக்கும் குறிப்பாணை வழங்கியுள்ளோம். அவா்கள் மீது நடவடிக்கை எடுத்த தயாராகி வருகிறோம் என்றனா் அவா்கள்.