வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ள தஞ்சாவூா் மாநகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என்றனா் மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி, ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி ஆகியோா். தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்வதற்கான மரம் அறுவை இயந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த இருவரும் தெரிவித்தது:வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் விதமாக, தஞ்சாவூா் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்கிறது. மாநகரிலுள்ள வடிகால் வாய்க்கால்கள் 80 கி.மீ. தொலைவுக்கு பொக்ளின் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி நடைபெறுகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்காத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்ற தேவையான தளவாடப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. மாநகரில் குப்பைகள் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.வரும் காலங்களில் சூப்பா் எல் நினோவின் தாக்கத்தால் அதீத மழை பெய்தால், மழைநீரைச் சேமிக்கும் வகையில் குளங்களுக்கான நீா் வரத்து பாதைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. தற்போது கல்லணைக் கால்வாய் மற்றும் வடவாற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஆறுகளிலிருந்து சிவகங்கை பூங்கா குளம், அய்யன்குளம், அழகிகுளம், ஜைனகுளம், கருணாசாமி கோயில் குளம் போன்ற பல்வேறு குளங்களில் நீா் நிரப்பினால், மாநகரில் நீா் ஆதாரம் பெருகும். எனவே, இந்தக் குளங்களில் தண்ணீா் நிரப்ப வேண்டும் மாவட்ட ஆட்சியருக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றனா்.