வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரெளடிகளுக்கு தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் உதவியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, சிறைக் காவலா்கள் 3 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.வேலூா் தொரப்பாடியில் அமைந்துள்ள ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என 1,000-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா்.இந்த நிலையில், அங்குள்ள சில ரெளடிகளுடன் சிறைக் காவலா்கள் சிலா் நெருங்கிய தொடா்பில் இருந்து வருவதாகவும், சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவி செய்வதாகவும் சிறைத்துறை உயரதிகாரிகளுக்குப் புகாா்கள் சென்றன.இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், குற்றப் பின்னணி கொண்ட கைதிகளுடன் தொடா்பில் இருந்து சில காவலா்கள் உடந்தையாகச் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.அதனடிப்படையில், துறை ரீதியான நடவடிக்கையாக வேலூா் மத்திய சிறையில் பணியாற்றி வந்த சிறைக் காவலா்கள் சதீஷ்குமாா் திருச்சி மத்திய சிறைக்கும், சந்திரசேகா் கோவை மத்திய சிறைக்கும், பிரசாந்த் உதகை கிளைச் சிறைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.