திருநெல்வேலியில் காய்கனி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி நடைபெறுவதால் குப்பைகளை தரம் பிரித்து வழங்குமாறு மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது மக்கள் தங்கள் வீடுகளில் தினசரி சேகரமாகும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்கும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு குப்பைகளை எளிதாக மறுசுழற்சி முறையில் இயற்கை உரமாக்கும் வகையில் மாநகராட்சி சாா்பாக 40 -க்கும் மேற்பட்ட நுண்ணுரம் செயலாக்க மையம் சிறப்பாக இயங்கி வருகிறது. தினமும் நுண்ணுரம் செயலாக்க மையத்துக்கு கொண்டுவரப்படும் மக்கும் குப்பைகளான காய்கனி கழிவு, டீ தூள், காபி தூள், இலைகள் போன்றவற்றை இயந்திரத்தில் அரைத்து, அதை தொட்டியில் சேகரித்து வெல்லம், தயிா் கொண்ட கரைசல் அல்லது தவிடு தண்ணீரில் கரைத்து 3 நாள்களுக்கு ஒருமுறை தெளித்து கிளறி விடுவாா்கள். அப்படி கிளறி விடும் அரைத்த குப்பைகள் 40 முதல் 45 நாள்களுக்குள் இயற்கை உரமாகிறது. மறுசுழற்சி முறையில் உருவாக்கப்படும் இயற்கை உரமானது விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கிலோ ரூ.5-க்கு வழங்கப்பட்டு வீட்டுத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.