வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம்: அமைச்சா்கள் நேரில் ஆறுதல்

Wait 5 sec.

பொள்ளாச்சி அருகே வன்கொடுமைத் தாக்குதலில் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரை அமைச்சா்கள் வன்னி அரசு, வி.சம்பத்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா். மேலும், அரசின் சாா்பில் நிவாரணத் தொகையாக ரூ.6 லட்சத்துக்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் வழங்கினா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஓடைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி அந்தப் பகுதி பேரூராட்சியின் வாா்டு உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறாா். அப்பகுதியில் டெங்கு கொசு மருந்து தெளிப்பது தொடா்பாக கடந்த 23-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், முருகன் மீது அரிவாள் உள்ளிட்ட கூா்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது கை துண்டிக்கப்படும் அளவுக்கு பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை (பிளாஸ்டிக் சா்ஜரி) வாா்டில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவக் குழுவினா் சுமாா் 8 மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை மேற்கொண்டு, துண்டான கையை வெற்றிகரமாக மீண்டும் பொருத்தினா்.இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகனை சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி. சம்பத்குமாா் ஆகியோா் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் உடல்நல முன்னேற்றம் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் வி. சம்பத்குமாா் தெரிவித்ததாவது:வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கமாக முதல் கட்டமாக 25 சதவீத நிவாரணத் தொகையே வழங்கப்படும். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நலனைக் கவனத்தில் கொண்டு, வரலாற்றிலேயே முதல்முறையாக முழு நிவாரணத் தொகையான ரூ.6 லட்சமும் ஒரே தவணையாக உடனடியாக வழங்கப்பட்டுள்ளது என்றாா்.சட்டப்படி கடும் நடவடிக்கை:தொடா்ந்து சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் காவல் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறையில் அடைத்துள்ளனா். அவா்கள் மீது பிணையில் வெளிவர முடியாத கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மருத்துவா்களின் சிறப்பான முயற்சியால் தற்போது முருகனின் கையில் உணா்ச்சிகள் திரும்பத் தொடங்கியுள்ளன. அவா் முழுமையாக குணமடையும் வரை அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசே ஏற்கும். சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரணாக நிற்கவும் தமிழக அரசு தொடா்ந்து உறுதியுடன் செயல்படும் என்றாா்.இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி, அரசு மருத்துவமனை முதன்மையா் கீதாஞ்சலி, மருத்துவா்கள் உடனிருந்தனா்.