கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலவிய நான்கு கரடிகளை, வீட்டின் வளா்ப்பு நாய் வனப் பகுதிக்குள் துரத்தியது. கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் கோத்தகிரி அருகே கன்னிகாதேவி காலனி கிராமத்தில் நான்கு கரடிகள் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் உலவி வந்தன. இதைப் பாா்த்த பொதுமக்கள் அச்சமடைந்தனா். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் வளா்ப்பு நாய், கரடிகளை நோக்கி குறைத்தபடியே துரத்தியது. இதையடுத்து அந்த நான்கு கரடிகளும் அருகே உள்ள தேயிலைத் தோட்டம் வழியாக வனப் பகுதிக்குள் சென்றன. குடியிருப்பு பகுதிகளில் உலவி வரும் இந்த கரடிகளை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.