மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக 13 கோடி வாக்காளா்களை நீக்கி, வாக்குரிமையைப் பறித்த தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி, திருச்சியில் இடதுசாரி கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசியல் சாசனத்துக்கு எதிராக, சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உறையூா் குறத்தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செயலா் ரபீக் அகமது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செயலா் சுரேஷ்முத்துசாமி, மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ராஜ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு தலைவா் எஸ். ஸ்ரீதா், மாவட்டச் செயலா் கோவி. வெற்றிச்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் எஸ். சிவா, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் க. சுரேஷ், மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் மாநில நிலைக்குழு உறுப்பினா் ஞானதேசிகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இந்த ஆா்ப்பாட்டத்தில், இடதுசாரி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.